Published : 14 Sep 2020 03:55 PM
Last Updated : 14 Sep 2020 03:55 PM

‘‘எந்த மொழியையும் திணிக்கவோ, எதிர்க்கவோ கூடாது’’ -வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், எந்த மொழியையும் திணிக்க கூடாது அல்லது எதிர்க்க கூடாது என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

இந்தி தினம் - 2020-ஐ முன்னிட்டு மதுபன் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு பேசினார். நமது அனைத்து மொழிகளும் வளமான வரலாறை கொண்டுள்ளது எனவும், நமது மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும் என்றும் வெங்கய்ய நாயுடு கூறினார்.

தென்னிந்திய இந்தி பிரசார சபையை மகாத்மா காந்தி 1918ம் ஆண்டு ஏற்படுத்தினார் என குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், இந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று நிறைவை ஏற்படுத்தும் வகையில் பார்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மக்களிடையே நல்லெண்ணம், அன்பு மற்றும் பாசத்தை அதிகரிக்க, இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தி கற்க வேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற ஏதாவது ஒரு மொழியை கற்க வேண்டும் வெங்கய்ய நாயுடு ஆலோசனை கூறினார்.

தேசிய கல்வி கொள்கை 2020-ல் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், ஒருங்கிணைந்த கல்விக்கு, தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என கூறினார். ‘‘இது பாடத்தை குழந்தைகள் புரிந்து கொண்டு படிக்கவும், சிறப்பாக வெளிப்படுத்த உதவும்’’ என்று அவர் கூறினார்.

தாய்மொழியில் கல்வி கற்க, நல்ல புத்தகங்கள் இந்தி மற்றும் இதர இந்திய மொழிகளில் எளிதில் கிடைப்பதில் புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என வெங்கய்ய நாயுடு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x