

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் மக்களவையில் நேரம் ரத்தானது குறித்து எதிர்கட்சிகள் புகார் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, விவாதத்தில் பதிலளிக்க அரசு அஞ்சாது எனப் பதிலளித்தார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இன்று காலை மக்களவை கூடியது. இதில், பூஜ்ஜிய நேரத்தில் கேள்வி நேரம் ரத்தானது குறித்த புகார் எழுந்ததுது.
இதன் மீது பேசிய காங்கிரஸின் எதிர்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, ‘கேள்வி நேரம் என்பது நாடாளுமன்றத்தின் பொன்நேரம் ஆகும். இதை ரத்து செய்ய கரோனா பரவல் காலத்தை சுட்டிக் காட்டுவது ஏற்புடையது அல்ல.’ எனத் தெரிவித்தார்.
இதற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பதிலளித்தபோது, ‘இது ஒரு அசாதாரண சூழல் ஆகும், இதில் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைகள் கூட ஒரு நாள் கூடவும் அஞ்சுகின்றன.
ஆனால், இங்கு 800 முதல் 850 பேர் வரை ஒன்றாகக் கூடி உள்ளோம். மத்திய அரசிடம் கேள்வி எழுப்ப பல்வேறு வழிகள் உள்ளன. எதிர்கட்சிகள் அவற்றை பயன்படுத்தலாம்.
இதற்கான விவாதத்தில் இருந்து அரசு அஞ்சி ஓடிவிடவில்லை. பெரும்பாலானக் கட்சித் தலைவர்களின் ஒட்டுமொத்த சம்மதத்துடன் தான் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்தார்.
இந்த பதிலுக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசும்போது, ‘உறுப்பினர்கள் தங்கள் கேள்விகளை எழுத்துமூலம் எழுப்ப வாய்ப்பு உள்ளது. இதை முழுவதுமாக எம்.பிக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இதற்கு அமைச்சர்கள் அளிக்கும் எழுத்துபூர்வ பதிலில் திருப்தி அடையாதவர்கள், பூஜ்ஜிய நேரத்தில் விளக்கம் கேட்கலாம். அசாதாரண சூழலில் கூடும் கூட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.’ எனக் கேட்டுக் கொண்டார்.
கடந்த 1950 ஆம் ஆண்டு முதலான நாடாளுமன்ற மக்களவையில் இன்று முதன்முறையாக கேள்வி நேரம் இல்லாமல் கூடியது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பூஜ்ஜிய நேரத்திற்கு பின் நடைபெற்ற கேள்வி நேரம் அன்றாடம் முதல் அம்சமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.