

மக்களின் கருத்துச் சுதந்திரத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்கவே அரசு தேசத்துரோக சட்டத்தை பயன்படுத்துகிறது, மக்களின் கருத்தைக் கண்டு அச்சப்பட்டு அதீத எதிர்வினையாற்றுகிறது மத்திய அரசு என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி.லோகுர் தெரிவித்துள்ளார்.
கருத்து/ பேச்சுச் சுதந்திரமும் நீதித்துறையும் என்ற ஆன்லைன் கருத்தரங்கில் பேசிய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லோகுர் பேசிய போது, சுதந்திரப் பேச்சை, கருத்துச் சுதந்திரத்தை நசுக்க, அரசின் மீதான விமர்சனக்கருத்துகளை ஒடுக்க அரசு கடைப்பிடிக்கும் இன்னொரு உத்திதான் அது போலிச் செய்தி என்று குற்றம்சாட்டுவதாகும்.
அவர் இதற்கு உதாரணமாக பத்திரிகையாள்ர்கள் கரோனா வைரஸ் தொற்று, பாதிப்பு, பலி எண்ணிக்கை தொடர்பான விஷயங்களை எழுதும் போதோ, வெண்ட்டிலேட்டர்கள் இல்லை என்று எழுதும் போதோ இவர்கள் மீது ‘போலிச்செய்தியைப் பரப்புகிறார்’என்று குற்றம்சாட்டுவார்கள்.
“பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவே அரசு தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது. திடீரென தேசத்துரோக வழக்குகள் புறப்பட இதுதான் காரணம். சாதாரண குடிமகன் ஏதாவது விமர்சனக் கருத்தை வெளியிட்டால் தேசத்துரோக வழக்கு பாயும். இந்த ஆண்டு ஏற்கெனவே கிட்டத்தட்ட 70 தேசத் துரோக வழக்குகளைப் பார்த்தாகி விட்டது.” என்றார்
பிரசாந்த் பூஷண் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு குறித்து கூறிய முன்னாள் நீதிபதி லோகுர், பூஷணின் கருத்து தவறாக வாசிக்கப்பட்டது என்றார்.
அதே போல் உபி. மருத்துவர் கபீல்கான் மீதான தேசிய பாதுகாப்பு ச்சட்டத்தையும் அவர், குறிப்பிட்டு அவர் பேசியது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது என்றார் முன்னாள் நீதிபதி லோகுர்.
மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கூறும்போது பிரசாந்த் பூஷணுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் எந்த ஒரு அடிப்படை ஆதாரத்தையும் காட்ட முடியவில்லை என்றார், “எனக்கு நீதித்துறை மீது மிகப்பெரிய மரியாதை உள்லது. பத்திரிகைச் சுதந்திரத்தை அரசமைப்பு சட்டத்திற்குள் வலியுறுத்துவதும் நீதித்துறைதான். வரும் நாட்களில் நீதித்துறை மீதான விசாரம் மேன் மேலும் பெருகவே செய்யும், அச்சிலும் ஊடகத்திலும் பிரசாந்த் பூஷண் ட்வீட்களைவிட கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.” என்றார்.
சமூக செயல்பாட்டாளர் அருணா ராய், “இப்படி அச்சுறுத்தும் நோக்கம் நீண்ட காலத்துக்கு வேலை செய்யாது, அரசமைப்பு சட்டம் நமக்கு அதிகாரம் அளித்துள்ளது” என்றார்.
இதற்கிடையே கோர்ட் அவமதிப்பு வழக்கில் தனக்கு விதித்த ஒரு ரூபாய் அபராத்தை உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் பூஷண் செலுத்தினார்.
அபராதம் செலுத்தும் முன் ஊடகங்களிடம் பேசிய பிரசாந்த் பூஷண், “மறுக்கும் குரல்களை விமர்சனக் குரல்களை மவுனமாக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்துகிறது. என் அபராதத் தொகையை செலுத்த நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பங்களித்தனர்.
இதன் மூலம் ‘உண்மை நிதி’ என்ற ஒன்று உருவாக்கப்பட்டு அரசு ஒடுக்குமுறையைச் சந்திக்கும் விமர்சனக்குரல் நபர்களுக்கு சட்டப் பாதுகாப்புக்கு பயன்படுத்தபப்டும்” என்றார்.