

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இன்றைய முதல்நாளில் திமுக நீட் விவகாரத்தை எழுப்பியது. இதில் பேசிய அக்கட்சியின் அவைத்தலைவர் டி.ஆர்.பாலு, எதிர்கால மருத்துவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வதாக கவலை தெரிவித்தார்.
இது குறித்து பூஜ்ஜிய நேரத்தில் திமுக சார்பில் அதன் மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், ‘நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் குறித்து இந்த அவையினர் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
நீட் தேர்வினால் இதுவரையும் தமிழகத்தில் 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் அனைவருமே கிராமப்புறப் பின்னணியை கொண்டவர்கள்.
மாநிலப் பாடப்பிரிவில் படித்து விட்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மட்டும் நடத்தப்படும் நீட் தேர்வை எழுத வேண்டியதாக உள்ளது. 12 ஆம் வகுப்பின் இறுதித்தேர்வை முடித்த ஒரு மாதத்திற்குள் இந்த நீட் தேர்வை எழுத வேண்டியதாக உள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டம் பற்றி அறியாதவர்களால் எப்படி நீட் எழுத முடியும். இதனால், இந்தியாவின் வருங்கால மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இன்று அவையில் அனைத்து உறுப்பினர்களும் அமர்ந்தபடியே பேச சபாநாயகர் ஓம் பிர்லாவால் அறிவுறுத்தப்பட்டனர். இதனால், டி.ஆர்.பாலு உள்ளிட்ட அனைத்து எம்.பிக்களுடன் மத்திய அமைச்சர்கள் கூட அமர்ந்தபடியே பேசினர்.
நீட் தேர்வை தடை செய்க என்பதன் ஆங்கில வாசகங்களுடன் கூடிய முகக்கவசத்தை கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் அணிந்திருந்தனர்.