

"பிரதமர் நரேந்திர மோடி மயில்களை வளர்ப்பதில் பரபரப்பாக இருப்பதால் மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளட்டும்" என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.,யுமான ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. நீட் தேர்வு விவகாரம், கரோனா ஊரடங்கால் நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார, பொருளாதாரத் தாக்கம் ஆகியவை இக்கூட்டத் தொடரில் முக்கியப் பிரச்சினைகளாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை இந்த வாரம் 50 லட்சத்தைக் கடந்துவிடும். கிட்டத்தட்ட 10 லட்சம் பேராவது சிகிச்சையில் இருப்பர்.
ஒரு தனிநபரின் ஈகோவைப் பாதுகாக்க அமல்படுத்தப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கு, நாட்டில் கரோனவைப் பரவச் செய்துவிட்டது.
மோடி அரசு சுயசார்பு அரசு எனக் கூறிக் கொள்கிறது. ஆனால், மக்கள் தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் தான் உள்ளனர். ஏனென்றால் பிரதமர் மயில்கள் வளர்ப்பதில் பரபரப்பாக இருக்கிறார்" என ராகுல் காந்தி காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தியின் வருடாந்திர உடல் பரிசோதனைக்காக ராகுல் காந்தி அவருடன் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதால் அவரால் இந்த கூட்டத் தொடரின் முதல் பாதியில் பங்கேற்க இயலவில்லை. இந்நிலையில், ராகுல் காந்தி இந்த ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி திட்டமிடப்படாமல் ஊரடங்கை அறிவித்ததால் 5 லட்சம் பேர் வேலை இழந்ததாக ஏற்கெனவே ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.