

கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை இந்த ஆண்டு எளிமையாக கொண்டாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
சுமார் 400 ஆண்டுகள் பழமையான மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையின்போது கொண்டாடப்படுகிறது. இதைக் காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மைசூருவில் குவிவார்கள். இந்த ஆண்டு வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தசரா விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்படும் தசராவிழா குறித்து முதல்வர் எடியூரப்பா மைசூரு, மண்டியா மாவட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மன்னர் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். அதில் கரோனா பரவல்காரணமாக விழாவை எளிமையாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, தீப்பந்த ஊர்வலம், மலர் கண்காட்சி, திரைப்பட விழா, இளைஞர் தசரா, மகளிர் தசரா உள்ளிட்டவை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது.
தசரா விழாவை தொடங்கி வைக்க கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை சிறப்புவிருந்தினர்களாக அழைக்க தீர்மானிக்கப்பட்டது. இறுதிநாளான விஜயதசமி தினத்தன்று நடக்கும் ஜம்பு சவாரியை (யானைகள் ஊர்வலம்) பன்னி மண்டபம் வரை 5 கிமீ தூரத்துக்கு நடத்தாமல், அரண்மனை வளாகத்திலே நடத்த முடிவெடுக்கப்பட்டது.
இதனிடையே, அர்ஜுனா யானைக்கு 60 வயதாகிவிட்டதால், அதற்கு இந்த ஆண்டு ஜம்பு சவாரியின்போது 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து மைசூரு மண்டல வனத்துறை துணை அதிகாரி அலெக்ஸாண்டர் கூறும்போது, "உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 60 வயதுக்கும் மேற்பட்ட யானையின் மீது கனமான பொருட்களை ஏற்றக் கூடாது. எனவே 10 ஆண்டுகளுக்கு மேலாக அம்பாரியை சுமந்த அர்ஜுனா யானைக்கு இந்த முறை அம்பாரியை சுமக்கும் வாய்ப்பு அளிக்க முடியாது.
எனவே, அபிமன்யூ யானைக்கு இம்முறை அம்பாரியை சுமக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். 54 வயதான அபிமன்யூ, கடந்த 5 ஆண்டுகளாக ரங்கபட்ணா தசரா விழாவில் அம்பாரியை சுமந்த அனுபவம் வாய்ந்தது. 2.68 மீட்டர் உயரமும் சுமார் 4,550 கிலோ எடையும் உடையது. மதுகவுடரு யானைகள் முகாமில் உள்ள அபிமன்யூ யானையை இன்னும் சில தினங்களில் மைசூரு வரவழைத்து, ஜம்பு சவாரிக்காக பயிற்சி அளிக்க இருக்கிறோம்.
இதேபோல ஜம்பு சவாரியில் பங்கேற்கும் அபிமன்யூ, விஜயா, கோபி, விக்ரம், கவுரி ஆகிய 5 யானைகளின் பட்டியலை அரசுக்கு அனுப்பியுள்ளோம். இந்த விஷயத்தில் வனத்துறை அமைச்சகம் இறுதி முடிவெடுக்கும். முன்னதாக 5 யானைகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். முடிவுகள் வந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுவரை உலகில் எந்த பகுதியிலும் யானைகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்படவில்லை" என்றார். அர்ஜுனா யானைக்கு 60 வயதாகிவிட்டதால், அதற்கு இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமக்கும் வாய்ப்பு கிடைக்காது.