

மும்பையில் உள்ள தனது அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும் என்று நம்புவதாக மகாராஷ்டிர ஆளுநரை சந்தித்த நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
பிஹார் தேர்தலே காரணம்..
இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் நேற்று முன்தினம் கட்டுரை எழுதியுள்ளார். அதில், ‘‘பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டே, மகாராஷ்டிராவை இழிவுபடுத்தும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்காக, பிஹாரைச் சேர்ந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலையை வைத்து அக்கட்சி அரசியல் செய்து வருகிறது.
சுஷாந்த் சிங் சார்ந்த ராஜபுத்திரர் சமூகத்தினர் உள்ளிட்ட சத்திரியர் இனத்தவரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே, மும்பையை அவமதிக்கும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்த ஒரேகாரணத்துக்காகத்தான், மும்பையை கீழ்த்தரமாக விமர்சித்த கங்கனா ரனாவத்துக்கு பாஜக ஆதரவளித்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமான செயலாகும்.
பாஜகவின் இந்த நடவடிக்கைகளை மகாராஷ்டிர மக்கள் கவனித்து வருகிறார்கள். உரிய நேரத்தில் அவர்கள் பாஜகவுக்கு பாடம் கற்பிப்பார்கள்’’ என கூறப்பட்டுள்ளது.