Published : 14 Sep 2020 06:53 AM
Last Updated : 14 Sep 2020 06:53 AM

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: யோகா பயிற்சி செய்ய மத்திய அரசு பரிந்துரை

புதுடெல்லி

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவர்கள் யோகா செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

நாட்டின் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனிடையே கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கரோனாவில் இருந்து மீண்டவர்கள் தினந்தோறும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். காலை அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும், வெந்நீர் அல்லது பாலில் ஒரு தேக்கரண்டி செவன்பிராஷ் கலந்து சாப்பிட வேண்டும். முகக் கவசம் அணிதல், கைகள், சுவாச உறுப்புகளை சுத்தமாக வைத்திருத்தல், தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல், வெந்நீர் குடித்தல் போன்றவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும், சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

யோகாசனம், பிராணயாமம், தியானம், மூச்சுப்பயிற்சியையும் கடைப்பிடிக்கலாம். சமமான மற்றும் சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். உடல் வெப்பநிலையை கண்காணித்தல், ரத்த அழுத்தம் பரிசோதித்தல், சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருத்தல் போன்றவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x