

பிஜு ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவராக நவீன் பட்நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தொடர்ந்து 4-வது முறையாக முதல்வராக அவர் பதவியேற்கவுள்ளார்.
புவனேஸ்வரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிஜு ஜனதா தளக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக நவீன் பட்நாயக்கை நியமிக்கும் தீர்மானத்தை மூத்த எம்.எல்.ஏ. வி.சுக்யான் குமாரி தியோ முன்மொழிந்தார். அதை எம்.எல்.ஏ. தாமோதர் ராவுத் வழிமொழிந்தார். இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள நவீன் பட்நாயக், 4-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். அவர் 2000-ம் ஆண்டிலிருந்து முதல்வராக இருந்து வருகிறார்.
தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்த நவீன் பட்நாயக், “ஒடிசாவின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 117-ஐ பிஜு ஜனதா தளம் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸிற்கு 16 இடங்களும், பாஜகவுக்கு 10 இடங்களும் கிடைத்தன.
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பிஜு ஜனதா தளத்திற்கு 103 இடங்கள் கிடைத்தன. இப்போது அக்கட்சிக்கு 14 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் இடம்பெற்ற அரசிதழை ஆளுநர் எஸ்.சி. ஜமீரிடம் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஜோதி பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை அளித்தார். இதையடுத்து புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.
பதவியேற்பு விழா நடைபெறும் நாள் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.