கோயிலுக்குள் நுழைந்த 4 தலித் பெண்களுக்கு அபராதம்: கர்நாடகாவில் அவலம்

கோயிலுக்குள்  நுழைந்த 4 தலித் பெண்களுக்கு அபராதம்: கர்நாடகாவில் அவலம்
Updated on
2 min read

கர்நாடக மாநிலம் ஹொலேநார்சிபூர் தாலுகாவில் உள்ள சிகரனஹல்லியில் ஸ்ரீபசவேஸ்வரர் கோயிலில் தடையை மீறி நுழைந்ததாக 4 தலித் பெண்களுக்கு உயர் சாதியினர் அபராதம் விதித்தனர்.

ஆனால், அபராதத் தொகையை செலுத்த முடியாது என்றும், கோயில் திருவிழாவுக்கு தாங்களும் பங்களிப்பு செய்கிறோம் என்றும் கோயிலுக்குள் நுழைய தங்களுக்கும் உரிமை உள்ளது என்றும் அந்த நான்கு பெண்களும் திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிகரனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த தாயம்மா என்ற 50 வயதைக் கடந்த பெண் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது உயர் சாதியினர் மீது கடும் விமர்சனங்களை வைத்தார். ஆகஸ்ட் 31-ம் தேதியன்று நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது இந்த 4 தலித் பெண்களும் கோயிலுக்குள் சென்றனர்.

இது பற்றி தாயம்மா கூறும்போது, “வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த 9 பெண்களும், தலித் பிரிவைச் சேர்ந்த 4 பெண்களும் கோயிலுக்குச் சென்றனர், அப்போது வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த தேவராஜா என்பவர் தலித் பெண்கள் நால்வரும் நுழையக் கூடாது என்று உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தார். நான் அவரை எதிர்க் கேள்வி கேட்டேன். இதில் கோபமடைந்த அவர் எங்களில் ஒருவரை தாக்க முற்பட்டார்” என்றார்.

இதற்கு அடுத்த நாளே உயர் சாதியினர் கூடி ரூ.1000 அபராதம் விதித்தனர். மேலும் சடங்குகள் என்பது கோயிலின் புனிதத்தையும் தூய்மையையும் காக்க நடைபெறுகிறது என்றும் இந்நிலையில் தலித்துகள் நுழைவினால் கோயிலின் புனிதம் கெட்டு விட்டது என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.

சிகரனஹல்லி, முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பிறப்பிடமான ஹரதனஹல்லிக்கு 2 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஹசன் ஜில்லா பஞ்சாயத்து சமுதாயக் கூடம் ஒன்றை கட்டினர்.

இதற்கு தேவே கவுடாவும் நிதியுதவி அளித்துள்ளார். ஆனால் இப்போது இந்த சமுதாயக் கூடம் வொக்கலிகா பவன் என்று மாறி இதில் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தாயம்மா தனது மகளின் திருமணத்தை அந்த சமுதாயக் கூடத்தில் நடத்த 2001-ம் ஆண்டு அனுமதி மறுத்த விவகாரத்தை நினைவு படுத்தி கூறினார். இதனால் திருமணத்தை தனது வீட்டுக்கு வெளியே நடத்த நேரிட்டதையும் தாயம்மா நினைவு கூர்ந்தார்.

தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பத்மம்மா என்ற மற்றொரு பெண்மணி கூறும்போது, “கடந்த ஆண்டு உயர்சாதிப்பிரிவினர் நடத்திய நிகழ்ச்சியில் சமுதாயக் கூடத்துக்குள் உணவு வேண்டி நுழைந்த தலித் இளைஞர் ஒருவர் கருணையற்ற முறையில் அடித்துத் துரத்தப்பட்டார். அரசு நிதியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தில் நாங்கள் ஏன் நுழையக் கூடாது? எங்களுக்கும் உரிமை உள்ளது” என்றார்.

இது குறித்து தி இந்து, சமுதாய நல அதிகாரி என்.ஆர்.புருஷோத்தமன் கவனத்துக்கு கொண்டு சென்ற போது, “கோயில், சமுதாய கூடம் ஆகியவற்றில் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப்படுவது சட்ட மீறலாகும். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பேன்” என்று உறுதியளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in