

டெல்லி மாநில முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி இன்று மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் போலீஸில் சரணடைவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆம் ஆத்மியின் மால்வியா நகர் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மீது, அவரது மனைவி வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, கொலை முயற்சி உள்ளிட்ட புகார்களை சுமத்தினார். இதுதொடர்பாக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.
சோம்நாத் பாரதியின் முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை யடுத்து அவர் தலைமறைவானார்.
இந்நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து முன் ஜாமீன் வழங்கி இடைக்கால நிவாரணம் அளிக்குமாறு அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி தத்து, "சோம்நாத் பாரதி மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. அவரது குழந்தைகள் நலன் கருதி சோம்நாத் பாரதியின் குடும்பப் பிரச்சினை விரைவில் முடிவடையவேண்டும் என விரும்புகிறோ,. எனவே சோம்நாத் பாரதி ஒரு பொறுப்பான குடிமகனாக உடனடியாக சரணடைய வேண்டும்" என்றனர்.
உச்ச நீதிமன்ற அறிவுரையை ஏற்று சோம்நாத் பாரதி இன்று மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் போலீஸில் சரணடைவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கை சமரச மையத்துக்கு மாற்றக் கோரி சோம்நாத் பாரதி தாக்கல் செயத மனு வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுக்கும் சிக்கல்:
இதனிடையே, அவர் சட்ட அமைச்சராக இருந்தபோது ஆப்பிரிக்க பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி நள்ளிரவில் சோதனை நடத்தியது தொடர்பாக அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். என கூறப்படுகிறது.