படேல் சமூகத்தினர் போராட்டம்: நாடு முழுவதும் பரவலாக்க ஹர்திக் படேல் திட்டம்

படேல் சமூகத்தினர் போராட்டம்: நாடு முழுவதும் பரவலாக்க ஹர்திக் படேல் திட்டம்
Updated on
1 min read

இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் (ஓபிசி) சேர்க்க கோரி குஜராத்தில் படேல் சமூகத்தினர் போராட்டம் நடத்திவரும் நிலையில், இந்தப் போராட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக போராட்டக்குழுவின் தலைவர் ஹர்திக் படேல் கூறியுள்ளார்.

படேல், குர்மி, குஜ்ஜார் ஆகிய சமூகத்தினரை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் வகையில் அகில பாரதிய படேல் நவநிர்மான் சேனா (ஏபிபிஎன்எஸ்) என்று அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இந்த அமைப்பின் தொண்டர்கள் மத்தியில் ஹர்திக் படேல் பேசியதாவது:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது சமூகத்தினரின் உரிமைக்காக ஏபிபிஎன்எஸ் போராடும். டெல்லியில் குஜ்ஜார் மக்களின் நிலங்கள் சொற்ப விலையில் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் மிகப்பெரிய கட்டிடங்கள் உருவாகியுள்ளன. கையகப்படுத்திய நிலங்களில் எந்தப் பணியும் மேற்கொள்ளப்படாத இடங்களை எங்கள் சகோதரர்களிடம் திருப்பித் தரவேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

குஜ்ஜார், குர்மி சமூகத் தலைவர்களிடம் வாங்கப்பட்ட நிலங்களில் தான் நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, அக் ஷர்தாம் கோயில் போன்ற முக்கிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

குஜராத்திலிருந்து ஒருவர் பிரதமராவதற்கு நாங்கள்தான் பேருதவி புரிந்தோம். எங்களுக்கு பாதகம் விளைவிக்க கூடாது. அகில பாரத படேல் நவநிர்மான் சேனாவை அரசியல் அமைப்பாக மாற்ற விரும்பவில்லை. ஆனால் தேவைப்பட்டால் அவ்வாறு மாற்றுவது குறித்து எந்த நேரமும் நாங்கள் முடிவு எடுப்போதும்.

சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தும் அரசியல் சார்பற்ற அமைப்பாக நாங்கள் செயல்படுவோம். படேல், குர்மி, குஜ்ஜார் சமூகத்தினர், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்களை பாதுகாப்பதே எங்கள் பணியாக இருக்கும்.

குஜராத், உத்தரப்பிரதேசம், பிஹார், சத்தீஸ்கரில் எங்கள் அமைப்பு பரவியுள்ளது. இந்த அமைப்பு குரல் கொடுத்தால் நாடே முடங்கும் வகையில் இதனை வலிமையாக கட்டமைக்க வேண்டும்.

இவ்வாறு ஹர்திக் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in