Published : 13 Sep 2020 09:20 PM
Last Updated : 13 Sep 2020 09:20 PM

85% முதல் 90% மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்: மத்திய அரசு தகவல்

நாடுமுழுவதும் இன்று நடத்தப்பட்ட நீட் தேர்வை விண்ணப்பித்தவர்களில் 85% முதல் 90% மாணவ, மாணவியர் எழுதியுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு கள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப் படுகிறது. இத்தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. அதன்படி, 2020-21 கல்வி ஆண்டில் இள நிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடக்கும் என என்டிஏ அறிவித்தது.

கரோனா பரவல் காரணமாக நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரி மாணவர்கள் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திட்டமிட்ட படி தேர்வை நடத்தலாம் என்றும் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்றது. பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடந்தது. இதற்காக 154 நகரங்களில் 3,842 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், நாமக்கல், சேலம், கோவை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடக்கிறது. அனைத்து நகரங்களிலும் ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் தேர்வு நடக்கும். ஆனால், மாநில மொழியில் எழுதுவோருக்கு அந்தந்த மாநிலத்தில் மட்டுமே தேர்வு நடக்கும்.

தமிழகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் 8 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

நாடுமுழுவதும் இன்று நடத்தப்பட்ட நீட் தேர்வை விண்ணப்பித்தவர்களில் 85% முதல் 90% மாணவ, மாணவியர் எழுதியுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நாடுமுழுவதும் இன்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 85% முதல் 90% மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். இதனை தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதன் மூலம் நமது நாட்டின் இளைய தலைமுறையின் ஆர்வம் வெளிப்பட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x