Last Updated : 13 Sep, 2020 05:07 PM

 

Published : 13 Sep 2020 05:07 PM
Last Updated : 13 Sep 2020 05:07 PM

அவசரச்சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வரும் 4 மசோதாக்களை எதிர்க்கட்சிகள் எதிர்க்கும்:ஜெய்ராம் ரமேஷ் பேட்டி

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் : கோப்புப்படம்

புதுடெல்லி


அவசரச்சட்டத்துக்கு மாற்றாக, மத்திய அரசு கொண்டுவரும் 11 மசோதாக்களில் 4 மசோதாக்களை காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் எதிர்க்கும். பிரதமர் மோடி பதில் அளிக்கக் கோரி வலியுறுத்துவோம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும்14-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 18 நாட்கள் அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடத்தப்படுவதால், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.

சமூக விலகலைக் கடைபிடிக்கும் வகையில் எம்.பி.க்கள் இருக்கை மாற்றப்பட்டுள்ளது. 96 மணிநேரத்துக்கு முன்பே எம்.பி.க்கள் கரோனா பரிசோதனை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது, அனைத்தும் எழுத்து மூலம் வழங்கப்படும் என்றும், கேள்விநேரத்துக்கு பிந்திய நேரம் 30நிமிடங்களாகவும்குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்றிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 11 மசோதாக்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்படுகின்றன.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் காணொலி வாயிலாகப் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அவசரச்சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு 11 மசோதாக்களை மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் வேளாண் தொடர்பான 3 மசோாதாக்களையும், வங்கிச் சீர்திருத்த திருத்தச் சட்டத்துக்கான மசோதாக்களையும் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்.

எங்களோடு ஒத்த மனநிலை, கருத்துள்ள எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்து நாடாளுமன்றத்தில் ஒருமித்து செயல்பட்டு இந்த மசோதாக்களை எதிர்ப்போம்.

மேலும், தேசத்தின் முன்இருக்கும் கரோனா விவகாரம், கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்துடன் மோதல், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, நடுத்தர சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டது, விமானநிலையங்கள் தனியார் மயம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை ஆகியவை குறித்து மக்களவை, மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மக்களவையில், மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி பதில் அளிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பிரதமர் மோடி வராவிட்டால், அவரை மக்களவை, மாநிலங்களவைக்கு வரக்கோருவோம்.

பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் காணொலி வாயிலாகப் பேசி, இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்துள்ளோம். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், நான் ஆகியோர் எங்களோடு ஒத்த மனநிலையுடன் உள்ள கட்சிகளுடன் பேசியுள்ளோம். அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.

மத்திய அரசு அவசரச்சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரும் மசோதாக்களில் 4 மசோதாக்களுக்கு எங்களோடு சேர்ந்து மற்ற எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிக்க தயாராகியுள்ளன

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x