

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியியிலிருந்து கடந்த 3 நாட்களுக்கு முன் விலகிய மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரகுவன்ஸ் பிரசாத் சிங் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
பிஹாரின் பிரதான எதிர்க்கட்சியான லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக ரகுவன்ஸ் பிரசாத் இருந்து வந்தார். கடந்த ஜூன் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை ரகுவன்ஸ் பிரசாத் உடல்நிலை மோசமடைந்து வென்டிலேட்டர் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சையளித்தும் பலன் அளிக்காமல் இன்று காலை 11 மணிக்கு காலமானார் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இறுதிச்சடங்கிற்காக ரகுவன்ஸ் பிரசாத் உடல் பிஹாருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன் தான் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ரகுவன்ஸ் பிரசாத் அனுப்பி இருந்தார். அதில், " சோசலிஸ்ட் தலைவர் கர்பூரி தாக்கூர் மறைவுக்குப்பின் 32 ஆண்டுகள் உங்களுடன் இருந்தேன். ஆனால், தன்னால் கட்சியில் தொடர முடியாத சூழலில் இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு சிறையில் இருந்தவாறே பதில் அளித்த லாலுபிரசாத் யாதவ், “ என்னால் நம்பமுடியவில்லை. முதலில் நீங்கள் உடல்நலம் பெறுங்கள். அதன்பின் பேசலாம். நீங்கள் எங்கும் போகமாட்டீர்கள். எனக்கு தெரியும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை ரகுவன்ஸ் பிரசாத் சிங் காலமானார் என்ற செய்தி கிடைத்ததும் அவரி்ன் நீண்டகால நண்பரான லாலு பிரசாத் வேதனையும், ஆழ்ந்த வருத்தமும் தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் “ அன்பு ரகுவன்ஸ், உங்களுக்கு என்ன நேர்ந்தது. உங்களிடம் நேற்று முன்தினம்தானே கூறினேன். ஆனால் என்னைவிட்டு சென்றுவீட்டீர்கள். என்னால் பேச முடியவில்லை. வேதனையாக இருக்கிறது. உங்களை இழந்து தவிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ரகுவன்ஸ் பிரசாத் மறைவு பிஹார் அரசியலுக்கு மிகப்பெரிய பேரிழப்பு. அரசியல் ரீதியான விஷயங்களையும், சமூக நீதிக்காகவும்வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தவர், விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக போராடியவர். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்” எனத் தெரிவித்தார்.
பிஹாரில் மூன்று பெட்ரோலியத் திட்டங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்றார். அப்போது, ரகுவன்ஸ் பிரசாத் மறைவு குறித்து தகவல் வெளியானது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “ ரகுவன்ஸ் பிரசாத் சிங் நம்மை விட்டு சென்றுவிட்டார். அவரின் மறைவு,பிஹாரின் அரசியலிலும், தேசத்தின் அரசியலிலும் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது ரகுவன்ஸ் பிரசாத் கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக பொறுப்பு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரகுவன்ஸ் பிரசாத்துக்கு திருமணமாகி மனைவியும், இருமகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி சில ஆண்டுகளுக்கு முன் காலமானார்.