Last Updated : 13 Sep, 2020 12:54 PM

 

Published : 13 Sep 2020 12:54 PM
Last Updated : 13 Sep 2020 12:54 PM

நடிகை கங்கனா ரணாவத்துக்கு  ஆதரவாக பாஜக இருப்பது துரதிர்ஷ்டம்: சஞ்சய் ராவத் கருத்து

நடிகை கங்கனா ரணாவத், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் : கோப்புப்படம்

மும்பை

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அவமானப்படுத்திய நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக பாஜக இருப்பது துரதிர்ஷ்டம். பிஹாரில் உயர் சாதி மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக என்ன வேண்டுமாலும் செய்யலாமா என்று சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் நடிகை கங்கணா ரணாவத் மும்பையைப் பற்றியும், மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் அவதூறாகப் பேசி கருத்துத் தெரிவித்தார்.

மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு கங்கணா மன்னிப்புக் கோர வேண்டும். அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரித்தார். இதனால் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கணா ரணாவத்துக்கும் இடையே ட்விட்டரில் கடுமையாக வாக்குவாதம் நடந்தது.

இது பெரிதாகி, நடிகை கங்கணா ரணாவத்துக்கும், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையிலான மோதலாக வெடித்தது.

நடிகை கங்கணா ரணாவத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இமாச்சலப்பிரதேச அரசு கூறி, அவருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கேட்டுக்கொண்டதையடுத்து, ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த செயலை சிவசேனா தலைவர்கள் கண்டித்தனர். அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சித்தனர்.

இதனிடையே, நடிகை கங்கனா ரணாவத்தின் மும்பை இல்லத்தில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதையடுத்து, அதை மும்பை மாநகராட்சி இடித்து அகற்றியது. இது தொடர்பாக கங்கனா ரணாவத் காட்டமாக முதல்வர் உத்தவ் தாக்கரேயையும், மகாராஷ்டிரா அரசையும் விமர்சித்திருந்தார்.

இந்தச் சூழலில் கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக பாஜக குரல் கொடுத்தது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திரபட்நாவிஸ், மகாராஷ்டிரா அரசு கங்கனா ரணாவத் விவகாரத்தில் கவனம்செலுத்துவதைவிட கரோனா வைரஸை கட்டுப்படுத்தில் கவனம் செலுத்தலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் அந்த கட்சியின் மூத்த தலைவரும், நாளேட்டின் ஆசிரியரும் எம்.பியுமான சஞ்சய் ராவத் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மும்பையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் திட்டமிட்டு முயற்சிகள் நடக்கின்றன, மாநகர் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவது சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இதுபோன்ற கடினமான சூழலின்போது, மகாராஷ்டிராவில் உள்ள மராத்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்தின் நிலைப்பாட்டுக்கு பாஜக ஆதரவு அளித்து வருகிறது.

இது பிஹாரில் அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் உயர் சாதிப் பிரிவினரான ராஜ்புத், சத்ரியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கும், தேர்தலில் வெற்றி பெறவும் பாஜக எடுக்கும் முயற்சியாகும்.

தேர்தலுக்காக மகாராஷ்டிராவை அவமானப்படுத்தினாலும் ஒரு பொருட்டு இல்லையா. பாஜகவில் உள்ள மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு தலைவர் கூட மாநிலம் அவமானப்படுத்தப்பட்டபோது வருத்தம் தெரிவிக்கவில்லை.

நடிகை கங்கனா ரணாவத் முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவமானப்படுத்தினாலும், மாநிலத்தின் மக்கள் எந்த எதிர்வினையையும் ஆற்றக்கூடாது. இது என்ன ஒரு தரப்பான சுதந்திரம்.

பாகிஸ்தான் என மும்பை நகரை பேசிவிட்டு, அந்த நகரில் சட்டவிரோத கட்டுகிறார் அந்த நடிகை. அதை மும்பை மாநகராட்சி இடித்தது. . சட்டவிரோதமான கட்டிடத்தை மும்பை மாநகராட்சி இடித்தால், அதற்கு பாஜக அழுகிறது. இதுஎன்ன வகையான விளையாட்டு.
இவ்வாறு சஞ்சய் ராவத் எழுதியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x