

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 47 லட்சத்தைக் கடந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைராஸ் புதிதாக 94 ஆயித்து 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 47 லட்சத்து 54 ஆயிரத்து 356 ஆக அதிரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி 20 லட்சத்தையும், 20-ம் தேதி 30 லட்சத்தையும், கடந்த 5-ம் தேதி 40 லட்சத்தையும் கரோனா தொற்று எட்டியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 4-வது நாளாக நாள்தோறும் 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதத்தின் கடந்த 12 நாட்களில் 10.65 லட்சம் பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 19.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதே வேகத்தில் சென்றால், செப்டம்பரில் 24 லட்சம் பேர் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் 13 ஆயிரம் பேர் உயிரிழந்ததுதான் உலகிலேயே கரோனாவில் அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்த நாடாகும். பிரேசில், அமெரிக்காவில்கூட இதுவரை 10 ஆயிரம் பேர் மட்டுமே செப்டம்பரில் உயிரிழந்துள்ளனர்.
இதில் ஆறுதல் அளிக்கும் விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37 லட்சத்து 2 ஆயிரத்து 595ஆக உயர்ந்து, 77.88 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 73 ஆயிரத்து 175 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20.47 சதவீதமாக இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 1,114 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 78 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்போர் வீதம் 1.65 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஐசிஎம்ஆர் தகவலின் படி இதுவரை நாட்டில் 5 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரத்து 928 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 71 ஆயிரத்து 702 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.