Published : 13 Sep 2020 08:10 AM
Last Updated : 13 Sep 2020 08:10 AM

திருமலையில் ரூ.200 கோடியில் தங்கும் விடுதி: 24-ம் தேதி கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் அடிக்கல்

கர்நாடக மாநில அரசு சார்பில் திருமலையில் ரூ.200 கோடியில்தங்கும் விடுதி கட்டுவதற்காக வரும் 24-ம் தேதி ஆந்திரா, கர்நாடகா மாநில முதல்வர்கள் அடிக்கல் நாட்ட உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வழக்கமாக பிரம்மோற்சவத்தின் போது ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சுவாமியின் வீதிஉலா முற்றிலும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில்கோயிலுக்குள், பிரம்மோற்சவத் தின் போது தினந்தோறும் எந்தெந்த வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுமோ அந்த வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு ரங்கநாதர் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி வரும் 23-ம்தேதி கருடசேவை நடைபெற உள்ளது. இந்த கருட சேவையின் போது ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.

இதை தொடர்ந்து அன்று இரவு திருமலையில் தங்கி , மறுநாள் 24 ம் தேதி காலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். கர்நாடக மாநில அரசின் சார்பில் திருமலையில் ரூ.200 கோடியில் பக்தர்களுக்காக தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. இதற்காக 24-ம் தேதி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் இணைந்து அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.

தமிழக பக்தர்களால்..

திருமலை திருப்பதி தேவஸ் தானம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

திருப்பதியில் நாளொன்றுக்கு 3,000 இலவச தரிசன டிக்கெட் வழங்க தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. இதனால் தமிழகத்திலிருந்து 10,000 முதல் 12,000 பக்தர்கள் இந்த டிக்கெட்களை வாங்க தினந்தோறும் வருகின்றனர். இதுவே கரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக அமைவதாக சிலஅதிகாரிகள் கருத்து தெரிவித்ததால், இலவச டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரத்து செய்யப்பட்ட 3,000 இலவச தரிசன டிக்கெட்களுக்கு பதில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x