Published : 01 Sep 2015 08:34 AM
Last Updated : 01 Sep 2015 08:34 AM

21-ம் நூற்றாண்டின் மாமனிதர் அப்துல் கலாம்: ஆந்திர சட்டப் பேரவையில் புகழாரம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 21-ம் நூற்றாண்டின் மாமனிதர் என ஆந்திர சட்டப்பேரவை புகழாரம் சூட்டி உள்ளது.

ஆந்திர சட்டப்பேரவையின் 5 நாள் கூட்டத்தொடர் நேற்று தொடங் கியது. பேரவை தொடங்கியதும் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடு அப்துல் கலாம் குறித்து பேசியதாவது:

ஏழைக் குடும்பத்தில் பிறந்து தனது அறிவாற்றல் மூலம் நாட்டின் உயரிய பதவியை வகித்தவர் அப்துல் கலாம். அவர் இறப்பதற்கு கடைசி வினாடி வரை இளைஞர் களின் வாழ்க்கையை வளமாக்க பாடுபட்டவர்.ஏவுகணை மற்றும் அணுகுண்டு கண்டுபிடிப்புகளால் வல்லரசு நாடுகள் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தவர்.

இவை அனைத்துக்கும் மேலாக ஒரு மாமனிதர் அப்துல் கலாம். இதனால் ஓங்கோலில் தொடங்க உள்ள ஐ.ஐ.ஐ.டி. உயர் கல்வி நிறுவனத்துக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட உள்ளது. அதே போல நாகார்ஜுனா பல்கலைக் கழக வளாகத்தில் விரைவில் அப்துல் கலாமுக்கு சிலை வைக்கப் படும். மேலும் ஒவ்வொரு ஆண்டும், முதல் மதிப்பெண் பெரும் மாணவ, மாணவியருக்கு அப்துல் கலாம் பெயரில் விருதுகளும், நற்சான்றிதழ்களும் வழங்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பேசும் போது, “இந்த நூற்றாண்டின் மாமனிதரை நாம் இழந்து விட்டோம். 19-ம் நூற்றாண்டில் சுவாமி விவேகானந்தரும் 20-ம் நூற்றாண்டில் மகாத்மா காந்தியும் மாமனிதர்களாக விளங்கினர். அதேபோல, இப்போதைய 21-ம் நூற்றாண்டில் அப்துல் கலாம் ஒரு உலகம் போற்றும் மாமனிதராக விளங்குகிறார் ” என்றார்.

மேலும் கோதாவரி புஷ்கரம் விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 29 பேருக்கும் பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x