Published : 13 Mar 2014 12:00 AM
Last Updated : 13 Mar 2014 12:00 AM

நமோ டீக்கடை விதிமீறலா?- தேர்தல் ஆணையம் வழக்கு; சர்ச்சையில் கேஜ்ரிவால் விருந்து

பாஜகவின் தேர்தல் பிரச்சார உத்திகளில் ஒன்றான ‘தேநீருடன் விவாதம்’ பிரச்சாரத்தில் இலவச டீ வழங்கியதற்காக சில பாஜக நிர்வாகிகள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

முன்அனுமதி பெற்று நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு வழக்குப் பதியும் தேர்தல் ஆணையம், ரூ.20 ஆயிரம் கொடுத்தால் கேஜ்ரிவாலுடன் விருந்து எனக் கூறி நிதி திரட்டும் ஆம் ஆத்மி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

‘தேநீருடன் விவாதம்’ என்ற பெயரில் பாஜக நடத்தும் நிகழ்ச்சியில் இலவசமாக டீ விநியோகம் செய்யப்பட்டது. இது ஒரு வகையில் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட லஞ்சம் எனக் கூறி, உத்தரப்பிரதேசத்தில் சில பாஜக நிர்வாகிகள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது போன்ற நிகழ்ச்சிகளை முன் அனுமதி பெற்று நடத்தலாம். ஆனால், இலவச டீ விநியோகம் தேர்தல் நடத்தை விதிமீறலாகும். அதனால் வழக்கு பதியப்படும் என உ.பி. தலைமைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி கூறுகையில், “ரூ. 20 ஆயிரம் பெற்றுக் கொண்டு கேஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிடும் நிகழ்ச்சியை ஆம் ஆத்மி நடத்தி வருகிறது.

இந்த விருந்து உண்ணும் திட்டத்துக்காக ஆம் ஆத்மி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன். பாஜகவின் திட்டம், ஆம் ஆத்மியின் திட்டம் இரண்டுக்குமே தடை விதிக்க வேண்டும் அல்லது இரண்டுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

‘தேநீருடன் விவாதம்’ நிகழ்ச்சியில் பங்கேற்பாளர் களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதால், அது இலவச டீ விநியோகம் அல்ல என பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய பெங்களூர் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “நாங்கள் வெளிப்படையான முறையில் நிதி திரட்டுகிறோம். பெரிய கட்சிகளின் நிதியாதாரங்களில் 75 சதவீதம் மறைமுகமான முறையில் பெறப்படுகின்றன” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இலவச நமோ டீ, ரூ. 20 ஆயிரத்துக்கு கேஜ்ரிவாலுடன் விருந்து நிகழ்ச்சி ஆகிய இந்த இரண்டில் எது தேர்தல் நடத்தை விதி மீறல் என்பதில் பாஜகவும் ஆம் ஆத்மியும் கடும் விவாதத்தில் இறங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x