

பிஹாரில் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் சக்தி கட்சி ஆகியவற்றின் முக்கியத் தலைவர் முதல்வர் நிதிஷ் குமாரிடம் ஐக்கியமாகியுள்ளனர்.
பிஹார் மாநிலத்தில் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை தீவிரமாக களத்தில் இறங்கி பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
பல்வேறு கட்சிகளில் இருந்தும் தலைவர்கள் கட்சி மாறும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. கடந்த இரு நாட்களுக்கு முன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரகுவன்ஸ்தான் அந்த கட்சியிலிருந்து விலகினார். ஆனால், இதுவரை எந்தக் கட்சியிலும் சேரவில்லை என்றாலும், நிதிஷ்குமாருடன் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் இரு எம்எல்ஏக்கல், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் ேநற்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தனர்.
மகா எதிர்க்கட்சிக் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, விகாஸ்ஷீல் இன்சான் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இதன்படி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சுதர்ஸன் குமார், பூர்னிமா யாதவ், ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான போலோ ராய், ஆர்எல்எஸ்பி கட்சியின் பிஹார் மாநில செய்தித்தொடர்பாளர் அபிஷேக் ஜா ஆகியோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தனர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் அசோக் சவுத்ரி, நீரஜ் குமார், ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் இந்த 4 தலைவர்களும் இணைந்து, அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டனர்.
இதுவரை லாலுபிரசாத் யாதவ் கட்சியிலிருந்து 7 எம்எல்ஏக்கள் அந்த கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் கடந்த ஒரு மாதத்தில் இணைந்துள்ளனர், ஆர்ஜேடி கட்சியின் சார்பில் 5 எம்எல்சி உறுப்பின்கள் ஜூன் மாதத்தில் இணைந்துள்ளனர்.