Last Updated : 12 Sep, 2020 12:35 PM

 

Published : 12 Sep 2020 12:35 PM
Last Updated : 12 Sep 2020 12:35 PM

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து குலாம்நபி ஆசாத், கார்கே திடீர் நீக்கம்: செயற்குழுவில் மிகப்பெரிய மாற்றம்: சோனியா காந்தி அதிரடி முடிவு

காங்கிரஸ் நிர்வாக அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை அதன் தலைவர் சோனியா காந்தி நேற்று செய்துள்ளார். இதன்படி, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத், மோதிலால் வோரா, அம்பிகா சோனி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை நீக்கி சோனியா காந்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.

செயற்குழுவுவில் மாற்றங்களைச் செய்த சோனியா காந்தி, ப.சிதம்பரம், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தாரீக் அன்வர், ஜிதேந்திர சிங் ஆகியோரை வழக்கமான உறுப்பினர்களாக மாற்றியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சிவேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சோனியா காந்திக்கு ஆலோசனைகள் அளி்க்கவும், நிர்வாகப் பணிகளை கவனிக்கவும் 6 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார். இந்த குழுவில் ஏ.கே. அந்தோனி, அகமது படேல், அம்பிகா சோனி, கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்ய மத்திய தேர்தல் ஆணையத்தை சோனியா அமைத்துள்ளார். இந்த குழுவுக்கு மதுசூதன் மிஸ்திரி தலைவராகவும், ராஜேஷ் மிஸ்ரா, கிருஷ்ணா பைரே கவுடா, ஜோதிமணி, அரவிந்தர்சிங் லவ்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுதான் புதிய தலைவரைத் தேர்வுசெய்யும்

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியிலிருந்து நீக்கப்பட்ட லூசின்கோ பலேரியாவுக்கு பதிலாக, மோதிலால் வோரா, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, தம்ராத்வாஜ் சாஹு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளராகவும், தகவல்தொடர்பு துறையின் பொறுப்பாளராகவும் உள்ளார். அவருக்கு கர்நாடக காங்கிரஸ் விவகாரங்களின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

காரியக் கமிட்டிக்கு நிரந்தர அழைப்பாளர்களாக திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், அவினாஷ் பாண்டே, சவுத்ரி ஆகியோரும், பிரமோத் திவாரி, பவன் குமார் பன்சால், ராஜீவ் சுக்லா, தினேஷ் குண்டுராவ், மாணிக்கம் தாகூர்,ஹெச்கே பாட்டீல், தேவேந்திர யாதவ், விவேக் பன்சால், மணிஷ் சத்ரத், குல்ஜித் நாக்ரா, பக்தா சரன் தாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைமையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் எனக் கோரி 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதில் முக்கியமான நபரான குலாம் நபி ஆசாத், பொதுச்செயலாளர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டாலும், செயற்குழுவில் வழக்கமான உறுப்பினராகத் தொடர்கிறார்.

இதற்கு முன்பாக செயற்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளராக இருந்த ஜிதின் பிரசாதா தற்போது நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மேற்கு வங்கம், அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு பொறுப்பாளராகவும் ஜிதின் பிரசாதா நியமிக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதில் முக்கியமான தலைவரான முகுல் வாஸ்னிக், மத்தியப்பிரதேசத்தின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களுக்கு பொறுப்பாளராக இருந்த அனுராக் நாராயன்சிங், ஆஷா குமார், கவுரவ் கோகாய், ராம் சந்திர குன்தியா ஆகியோர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயாளர் பதவியிலேயே பிரியங்கா காந்தி தொடர்கிறார். முன்பு உ.பி. கிழக்குப் பகுதியின் பொதுச்செயலாளராக மட்டும் இருந்த நிலையில், ஜோதிர் ஆதித்யா சிந்தியா பாஜகவில் இணைந்தபின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி மாற்றப்பட்டுள்ளார். ஆதலால், பிரியங்கா காந்திக்கு புதிதாக எந்த பதவியும் வழங்கப்படவில்லை.

இது தவிர பஞ்சாப் மாநில பொதுச்செயலாளர் ஹரிஸ் ராவத், ஆந்திர மாநிலத்தின் பொதுச்செயலாளர் உம்மன் சாண்டி, கேரளா, லட்சத்தீவுகளுக்கு பொதுச்செயலாளராக தாரிக் அன்வர், அசாம் மாநிலத்துக்கு ஜிதேந்திர சிங், ராஜஸ்தானுக்கு அஜய் மக்கான், அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளராக ரஜினி பாட்டீல், சத்தீஸ்கருக்கு பிஎல். பூனியா, ஜார்க்கண்ட்டுக்கு ஆர்பிஎன் சிங், டெல்லி, பிஹாருக்கு சக்திசின் கோகில், குஜராத், தாத்ரா நகர் ஹாவேலிக்கு ராஜீவ் சங்கர்ராவ் சத்வ், இமாச்சலப்பிரதேசத்துக்கு ராஜீவ் சுக்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி, கோவாவுக்கு பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ், தெலங்கனாவுக்கு மாணிக்கம் தாகூர், ஒடிசாவுக்கு செல்லக்குமார், மகாராஷ்டிராவுக்கு ஹெச்கே பாட்டீல், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தேவேந்திர யாதவ், ஹரியாணாவுக்கு விவேக் பன்சால், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயாவுக்கு மணிஷ் சத்ரத், மிசோரம் மணிப்பூருக்கு பக்தா சரன் தாஸ், சிக்கிம், நாகாலாந்து,திரிபுராவுக்கு பொறுப்பாக குல்ஜித் சிங் நாக்ரா நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x