

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியை ஒளிபரப்ப வேண்டாம் என்று மகாராஷ்ட்ராவில் உள்ள தொலைக்காட்சி கேபிள் ஆபரேட்டர்களுக்கு ஆளும் சிவசேனா தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்துள்ள ரிபப்ளிக் டிவி ‘மீடியா ட்ரையல்’ நடத்தி வருகிறது, இதில் சிவசேனா பற்றி விமர்சனங்கள் தொடர்ச்சியாக வருகிறது, இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரேயை ‘இன்சல்ட்’ செய்யும் விதமாக ரிபப்ளிக் டிவி கருத்து தெரிவித்ததால் அர்னாப் கோஸ்வாமி தலைமை எடிட்டராக இந்த சேனலை கேபிள் ஆபரேட்டர்கள் ஒளிபரப்பக் கூடாது என்று சிவசேனா கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு உடன்படவில்லை எனில் சிவசேனா போராட்டம் நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஷிவ்கேபிள்சேனா 10ம் தேதி அனைத்து கேபிள் ஆபரேட்டர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதம் டென் நெட்வொர்க்ஸ், ஹாத்வே, இன்கேபிள் நெட், ஜிடிபிஎல், ஜேபிஆர் நெட்வொர்க், பிஆர்டிஎஸ் நெட் வொர்க், உள்ளிட்ட கேபிள் நிறுவனங்களுக்கு ஷிவ்கேபிள் சேனா கடிதம் எழுதி ரிபப்ளிக் டிவியை ஒளிபரப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
ஷிவ்கேபிள்சேனாவின் செயலர் வினய் ராஜு பாட்டீல், தி பிரிண்ட் ஆங்கில ஊடகத்திடம் கூறும்போது, “அர்னாப் கோஸ்வாமி குறைந்தது இருமுறை உத்தவ் தாக்கரேயை இழிவாகப் பேசினார்.பிரதமர், முதல்வர், குடியரசு தலைவர் ஆகியோர் அரசியலமைப்புச்சட்ட அதிகாரிகள் ஆவார்கள். இவர்களை இழிவு படுத்திப் பேச முடியாது, இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. சிவசேனாவும் மகாராஷ்டிர மக்களும் இதனைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” என்றார்.
மேலும் பத்திரிகை அறத்தை மீறி ரிபப்ளிக் டிவி செயல்படுவதாக கேபிள் ஆபரேட்டர்களுக்கு ஷிவ்கேபிள்சேனா தன் கடிதத்தில் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.