Published : 12 Sep 2020 08:20 AM
Last Updated : 12 Sep 2020 08:20 AM

ஆந்திராவில் பிறந்த 21 நாளில் பிரிந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த மகள்

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் கொத்தபேட்டா நகரைச் சேர்ந்தவர் அல்லம்பில்லி ரமணா. இப்பெண்ணுக்கு கடந்த 1999-ல்பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து ரமணா கூறும்போது, “பிரசவத்துக்குப் பிறகு எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் எனது 21 நாள் குழந்தையை ராமகிருஷ்ணா – நீலம்மா தம்பதியிடம் கொடுத்தேன். அவர்கள், குழந்தைக்கு பால துர்கா என பெயரிட்டு வளர்த்தனர். 3 ஆண்டுளுக்கு பிறகுராமகிருஷ்ணா குடும்பம் என்னிடம் சொல்லாமல் வேறு இடத்துக்கு சென்றுவிட்டது” என்றார்.

இந்நிலையில் பால துர்காவுக்கு 10 வயதாகும் போது அவரது வளர்ப்பு பெற்றோர் இறந்தனர். இதனால் அவர்களின் உறவினர் ஒருவர் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்துக்கு பால துர்காவை அழைத்துச் சென்றார். அங்குள்ள அரசுப் பள்ளியில் படிக்க வைத்தார். 9-ம் வகுப்புக்கு பிறகு பால துர்காவின் படிப்பை நிறுத்திய அக்குடும்பத்தினர் ஆடு மேய்த்து வர காட்டுக்குஅனுப்பி உள்ளனர். இதனால் வீட்டை விட்டு ஓடிய பால துர்காவை ஒரு தொண்டு நிறுவனம் மீட்டது. பிறகு மாநில மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறை அவரை பள்ளியில் சேர்த்தது.

இதுகுறித்து பால துர்கா கூறும்போது, “10-ம் வகுப்புக்கு பிறகு நாகராஜா என்ற பத்திரிகையாளர் எனது படிப்புக்கு உதவினார். பி.காம் பட்டப்படிப்புக்கு பிறகு, ஆந்திர அரசுப் போக்குவரத்து கழகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக அண்மையில் பணியில் சேர்ந்தேன். அங்கு சக ஊழியர் ஒருவர் எனது இயல்புகளை கண்டுநான் ரமணாவின் மகள் என்று அடையாளம் கண்டார்” என்றார்.

பிறகு பால துர்காவின் பின்னணியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சூரிய சக்ரவேணி ஆராய்ந்து, அவர் ரமணாவின் மகள்தான் என்ற முடிவுக்கு வந்தார்.

இதையடுத்து திட்ட இயக்குநர் கே.விஜயகுமாரி கடந்த புதன்கிழமை ஏலூருவில் பால துர்காவை அவரது தாயார் ரமணாவுடன் சேர்த்து வைத்தார். அப்போது தாயும் மகளும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இருவரும் உணர்ச்சிப் பெருக்குடன் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x