ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: ஜி4 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: ஜி4 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
Updated on
2 min read

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. அமைப்பில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் 15 நாடுகள் அடங்கிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரமிக்க அமைப்பாகும். இந்த அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இதர 10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மிக நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.

அவரது பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஜி4 நாடுகளின் மாநாடு நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஜி4 அமைப்பில் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.

மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஐநா அமைப்பு உதயமான காலத்திலிருந்து அடியோடு மாறியுள்ள காலகட்டத்தில் இப்போது நாம் வாழ்கிறோம். ஐ.நா.வில் உள்ள உறுப்பு நாடுகள் எண்ணிக்கை 4 மடங்காக உயர்ந்துள்ளது.. உலகளாவிய அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன.

இதை கருத்திற்கொண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்போதுதான் ஐநா சீர்திருத்தம் குறித்து பொதுச் சபையின் 69-வது கூட்டத்தில் முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முதலாவது அடிதான். அடுத்த கூட்டத்தில் இது நல்லவிதமான முடிவுக்கு வர நாம் இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நிரந்திர உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும். பெரிய கண்டங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.

அப்போதுதான் 21-ம் நூற்றாண்டில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை திறம்பட சமாளிக்க முடியும். எனவே குறித்த காலக்கெடுவுக்குள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வது அவசர, அவசியமாகும்.

பருவநிலை மாற்றம், தீவிரவாதம் ஆகியவை மிகப் பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. தகவல் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவை புதிய வாய்ப்பாகவும் அதேநேரம் சவாலாகவும் உருவெடுத்துள்ளன.

கடந்த 2004-ம் ஆண்டில் நாம் ஜி4 அமைப்பாக ஒன்று சேர்ந்தோம். உலக அமைதி, வளம் ஆகியவை இந்த அமைப்பின் பொதுவான நோக்கமாகும். உலகம் நம்மிடம் எதிர்பார்க்கும் பொறுப்புகளை நாம் ஏற்க முன்வரவேண்டும்

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் பேசியபோது, ‘ஜி4 அமைப்பானது பிரத்யேகமானது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டு வருவது அமைப்பின் லட்சியங்களில் ஒன்று. இதுதொடர்பாக இதர நாடுகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

நான்கு நாடுகளும் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கோரி வருகின்றன. அந்த வகையில் ஐ.நா. சபையில் பரஸ்பரம் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

ஐ.நா. அமைதிப் படைப் பிரிவின் மாநாடு வரும் செப்டம்பர் 28-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்குமாறு வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in