அதிமுக உள்கட்சி தேர்தல் வழக்கு: ஜெ. மீது குற்றம் சாட்டியவருக்கு நீதிபதி கண்டனம் - பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக உள்கட்சி தேர்தல் வழக்கு: ஜெ. மீது குற்றம் சாட்டியவருக்கு நீதிபதி கண்டனம் - பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Updated on
1 min read

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்.செல்வராஜ், கோபி,காவேரி உள்ளிட்ட 35 பேர் பெங்களூரு மாநகர குடிமையியல் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், “கர்நாடக மாநில அதிமுக உள்கட்சி தேர்தலில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வில்லை. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தேர்தலை நடத்தாமல், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கே தெரியாமல் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தி, தமிழக அமைச்சர்கள் ரமணா, பழனியப்பன் மற்றும் அதிமுக எம்எல்ஏ மணி மாறன் ஆகியோர் இந்த முறை கேட்டில் ஈடுபட்டுள்ளனர். எனவே சட்ட விதிமுறைகளை மீறி, முறை கேடாக நடத்தப்படும் அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்''என கோரியிருந்தார்.

இந்த மனுவை கடந்த 28-ம் தேதி விசாரித்த பெங்களூரு மாநகர 32-வது குடிமையியல் நீதிமன்ற நீதிபதி வி.பி.சூரியவன்சி கர்நாடக மாநில அதிமுக உள்கட்சி தேர்தலை நடத்த தடை விதித்தார். மேலும் ஜெயலலிதா, வா.புகழேந்தி, கர்நாடக மாநில தேர்தல் ஆணையர், முதன்மை தேர்தல் அதிகாரி ஆகிய நால்வரும் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஜெயலலிதா வுக்கு எதிராக மனு தாக்கல் செய்த 35 வழக்கறிஞர்களில் எத்திராஜ், கோபி, கலாவதி, காவேரி, பூபாலன், சதானந்தன் ஆகிய 6 வழக்கறிஞர் கள் நேற்று முன் தினம் பெங்களூரு மாநகர 32-வது குடிமையியல் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதை நீதிபதி வி.பி.சூரியவன்சி விசாரித்த போது, ''கர்நாடக மாநில உள்கட்சி தேர்தல் தொடர்பாக மனு தாக்கல் செய்ய நாங்கள் யாருக்கும் அதிகாரம் வழங்கவில்லை. எங்களது பெயரை தவறாக பயன்படுத்தி வழக்கறிஞர் செல்வராஜ் உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்துள்ளார். எங்களது பெயரில் மனு தாக்கல் செய்துள்ள செல்வராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்''எனக் கூறி 6 பேரும் தனித்தனியாக பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வி.பி.சூரியவன்சி, “மனு தாரர் செல்வராஜ் நீதிமன்றத்தில் தவறான ஆவணங்களை தாக்கல் செய்தது கண்டனத்துக்கு உரியது. அதிமுக நிர்வாகிகள் மீது உள்நோக் கத்துடன் வழக்கு தொடுத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர் பாக செல்வராஜ் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் 35 மனு தாரர்களின் பிரமாண பத்திரங் களையும் தாக்கல் செய்ய வேண்டும்'' என சம்மன் அனுப் பினார். இந்நிலையில் கர்நாடக மாநில அதிமுக‌ உள்கட்சி தேர்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in