

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு வெளியே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சீக்கியர்கள், படேல் இனத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.நா.தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு உச்சி மாநாட்டில், ‘நீடித்த வளர்ச்சி’ என்ற தலைப்பில் நரேந்திர மோடி உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
‘சீக்கியர்களுக்கு நீதி வேண்டும்’ (எஸ்எப்ஜே) என்ற என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கலந்துகொண்டனர். பஞ்சாபில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், இந்தியா, மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
மேலும் காலிஸ்தான் பகுதியை தனி மாநிலமாக பிரிப்பது தொடர்பாக 2020-ல் பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
எஸ்எப்ஜே அமைப்பின் முக்கிய தலைவர் பக் ஷிஷ் சிங் சாந்து கூறும்போது, “கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுகின்றன” என்றார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த படேல் இனத்தவர்களும் மோடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அனில் படேல் கூறும்போது, “குஜராத்தில் இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 4,000 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த அப்பாவி மக்களை போலீஸார் துன்புறுத்துகின்றனர். இந்த விஷயத்தில் நீதி வேண்டும்” என்றார்.
அதேநேரம், இந்திய வைர மற்றும் ரத்தின கற்கள் துறையைச் சேர்ந்த படேல் இனத்தவர்கள் மோடிக்கு ஆதரவாகவும் அவரை வரவேற்றும் பேரணி நடத்தினர்.