

மகாராஷ்டிராவில் கரோனா உயிரைக்குடித்து கொண்டிருக்கும் நிலையில் அங்கு கங்கனா அரசியல் பெரிய அளவில் தலைதூக்கியுள்ளது.
கங்கனா ரணாவத் மும்பையை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டதோடு சிவசேனா ஆட்சியை தலிபான்களுடன் ஒப்பிட்டு பாஜக மேலிடத்தின் ஆசியைப் பெற, சிவசேனாவின் பகையைச் சம்பாதித்துக் கொண்டார், இதனையடுத்து அவரது அலுவலகத்தை மும்பை கார்ப்பரேஷன் இடித்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார் கங்கனா.
கங்கனா ரணாவத்துக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ‘கங்கனா ரணாவத் விஷயம் சிவசேனாவால் ஊதிப்பெருக்கப்பட்டுள்ளது.
கங்கனா என்ன உங்கள் அரசியல் எதிரியா? தாவூத் வீட்டை இடிக்க மாட்டீர்கள் ஆனால் கங்கனா அலுவலகக் கட்டிடத்தை இடிப்பீர்கள்.
மகாராஷ்டிர அரசு போரிட வேண்டியது கரோனாவுக்கு எதிராகத்தானே தவிர கங்கனாவுக்கு எதிராக அல்ல. இதில் 50% முயற்சியை மேற்கொண்டிருந்தாலே கரோனா பரவலை தடுத்திருக்க முடியும்.
நாளொன்றுக்கு 25-30 ஆயிரம் புதிய கரோனா தொற்றுக்கள் தோன்றுகின்றன. மொத்த கரோனா பலியில் 40% மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. ஆனால் அரசு இதைப்பற்றி கவலைப்படுவதில்லை’ என்றார் பட்னவிஸ்.