அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து போலி காசோலை மூலம் ரூ.6 லட்சம் பணம் மோசடி: எப்படி நடந்தது? போலீஸார் வழக்குப்பதிவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு உருவாக்கிய ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து போலியாக வங்கியில் காசோலை கொடுத்து ரூ.6 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி தொடர்பாக அறக்கட்டளையின் செயலாளரும், விஸ்வ இந்து பரிசத் தலைவர் சம்பத் ராய் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து அயோத்தி காவல் டிஐஜி தீபக் குமார் கூறுகையில் “ ராமர் கோயில் அறக்கட்டளையிலிருந்து எடுக்கப்பட்ட பணம் எந்த வங்கிக்கணக்கிறக்கு மாற்றப்பட்டதோ அந்த வங்கிக்கணக்கை முடக்கிவிட்டோம்.

லக்னோவிலிருந்து போலீஸார் தனிப்படை ஒன்று மும்பைக்கு விரைந்துள்ளது. அந்த வங்கிக்கணக்கு மும்பையைச் சேர்ந்த ஒருவருடையது, அதனால் மகாராஷ்டிரா போலீஸாரின் உதவி கோரி அங்கு உ.பி. போலீஸார் சென்றுள்ளனர்.

அறக்கட்டளை வங்கிக்கணக்கிலிருந்து இதுவரை ரூ.4 லட்சம்வரை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் அந்தவங்கிக்கணக்கிலேயே இருக்கிறது. கடந்த 1-ம் தேதி ஒரு காசோலை மூலம் ரூ.2.5 லட்சமும், அதன்பின் 8-ம் தேதி ரூ.3.5 லட்சமும் போலி காசோலை மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

3-வது காசோலை மூலம் ரூ.9.86 லட்சத்துக்கு எடுக்க முயன்றபோதுதான், ஸ்டேட் வங்கியின் அதிகாரி சந்தேகப்பட்டு அறக்கட்டளை நிர்வாகியைத் தொடர்பு கொண்டு கேட்டபோதுதான் அது போலியான காசோலை எனத் தெரியவந்தது” எனத் தெரிவித்தார்.

எஸ்பிஐ வங்கியின் துணை மேலாளர் மோனா ரஸ்தோரி பிடிஐ நிருபரிடம் கூறுகையில் “ மிகப்பெரிய தொகைக்கு காசோலை வந்தால், உடனடியாக வங்கிக்கணக்கு வைத்திருப்போருக்கு தொலைப்பேசி மூலம் அழைத்து காசோலை குறித்து உறுதி செய்தபின்புதான் பணத்தை வழங்குவோம்.

ரூ.9.86 லட்சத்துக்கு காசோலை வந்தபோது நான் இதுதொடர்பாக சம்பத் ராய்க்கு தொலைப்பேசியில் அழைத்தேன், ஆனால் நீண்டநேரமாக பதில் அளிக்கவில்லை, அதன்பின் எடுத்து பதில் அளித்தார்.

என்னைப் போலவே, இதற்கு முன் இருந்த அதிகாரிகளும் அறக்கட்டளை வழங்கிய தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிவிட்டுத்தான் 2 காசோலைக்கான பணத்தை கொடுத்திருப்பார்கள்.
தொலைபேசி அழைப்புப் பதிவுகளை ஆய்வு செய்தால் கணக்கு வைத்திருப்போர் பேசிய விவரங்கள் தெரிந்துவிடும்.

எங்களைப் பொறுத்தவரை பெரிய தொகைக்கான காசோலை வந்தால், சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கு வைத்திருப்போரை தொடர்பு கொண்டு பேசிவிட்டுத்தான் கொடுப்போம். அவர்கள் அனுமதியில்லாமல் வழங்கமாட்டோம்.

மூன்று காசோலை வந்தபோது பலமுறை தொடர்பு கொண்டபோது சம்பத்ராய் மொபைல் போனை எடுக்கவில்லை. அந்த காசோலையில் இருந்த கையொப்பத்துக்கும், உண்மையான கையொப்பத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. எங்கள் வங்கியின் விதிமுறைகளைப்பொருத்தவரை காசோலையில் கையொப்பம் சரியாக இருந்தால், பணம் கொடுக்கலாம்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in