Last Updated : 10 Sep, 2020 06:11 PM

 

Published : 10 Sep 2020 06:11 PM
Last Updated : 10 Sep 2020 06:11 PM

அக்.4-ம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு: பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து யூபிஎஸ்சி அறிவிப்பு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி


நாடு முழுவதும் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து யூபிஎஸ்சி விரிவான விளக்கம் அளித்துள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடக்கும்.

இதில் அக்டோபர் 4-ம் தேதி சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. கடந்த மே மாதம் 31-ம் தேதி நடக்க வேண்டிய தேர்வு, கரோனா வைரஸ் பரவலால் ஒத்தி வைக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் தேர்வுகள் நடைபெறுவதால், தேர்வு எழுத வருவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து யூபிஎஸ்சி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

  • தேர்வுக்கு வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் இல்லாமல் தேர்வு எழுந்த வந்தால் தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • தேர்வு எழுத வருவோர் அனைவரும் சொந்தமாக சானிடைசர் கொண்டுவர வேண்டும். சானிடைசர் எடுத்துவரும் பாட்டில், எந்தவிதமான எழுத்தும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
  • தேர்வு எழுத வருபவர்கள் அனைவரும் கரோனா தடுப்பு விதிகளான சமூக விலகலைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் சுய சுத்தத்தை தேர்வு அறைக்குள்ளும், வளாகத்திலும் கடைப்பிடிக்க வேண்டும்.
  • தேர்வு எழுத வருவோருக்காக மின்னணு அனுமதிக் கடிதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் http://upsconline.nic.in கடிதத்தைப் பதவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் வரும்வரை மின்னணு அனுமதிக் கடிதத்தைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கு யாருக்கும் கடிதம் மூலம் அனுமதிக் கடிதம் அனுப்பப்படாது.
  • தேர்வு எழுத வரும்போது, தேர்வாளர்கள் அனைவரும் தங்களின் மின்னணு அனுமதிக் கடிதத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தேர்வு எழுத வருவோர் தங்களின் இ-அட்மிட் கார்டில் புகைப்படம் ஒட்டி எடுத்து வர வேண்டும்.
  • தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே தேர்வு மையங்கள் மூடப்படும் என்பதால் அனைத்துத் தேர்வாளர்களும் முன்கூட்டியே தேர்வு மையத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • அதாவது, 9.20 மணிக்கு முதல் கட்டத் தேர்வும், பிற்பகல் 2.20 மணிக்கு 2-ம் கட்டத் தேர்வும் நடக்கும். தேர்வு மையத்தின் கதவுகள் மூடப்பட்டபின் தேர்வு எழுத வருவோர் எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  • தேர்வு எழுத வருவோர் அனைவரும் கறுப்புநிற பால் பாயின்ட் பேனா எடுத்துவர அறிவுறுத்தப்படுகிறார்கள். கேள்விக்குப் பதில் அளிக்கும் ஓஎம்ஆர் ஷீட்டில் குறிக்கவும், வருகைப் பதிவேட்டுக்கும் கறுப்பு பால்பாயின்ட் பேனாவைப் பயன்படுத்த வேண்டும்.
  • தேர்வு மையத்துக்குள் வழக்கமான சாதாரண கைக்கடிகாரம் அணிந்து வர அனுமதி உண்டு.
  • கைக்கடிகாரத்தில் ஏதேனும் புதுவிதமான கருவிகள், கூடுதல் தகவல் தொடர்பு வசதிகள் இருக்கும், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை அணிந்துவரக் கூடாது. அவ்வாறு அணிந்து வந்தால், தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • மொபைல் போன், பேஜர், உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்கள் கொண்டுவந்தாலும், தேர்வு தொடங்கும் முன் அதை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட வேண்டும்.
  • தகவல்களைச் சேமித்து வைக்கும் பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச், கேமரா, ப்ளூடூத் சாதனங்கள், கால்குலேட்டர் போன்றவை அனைத்தும் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட வேண்டும். இதைத் தேர்வு அறைக்குள் கொண்டுவந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • இந்த விதிமுறைகளை மீறி நடக்கும் தேர்வு எழுத வருவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, எதிர்காலத்தில் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படுவார்கள். விலை மதிப்புள்ள பொருட்கள், பைகள் போன்றவையும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படாது.

இவ்வாறு யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x