

கரோனா வைரஸை எளிதாக எடுக்காதீர்கள். அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று பிரமதர் மோடி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பிஹார் மாநிலத்தில் அக்டோபர், நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையடுத்து பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று அறிவித்தார். அதில் கால்நடைத்துறை, மீன்வளத்துறையில் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் அதிகப்படுத்தும் வகையில் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.20,050 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மேலும், கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இ-கோபாலா எனும் மொபைல் செயலியையும் பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்தார். கால்நடைகள் சந்திக்கும் பிரச்சினைகள், நோய்கள் குறித்து அறிந்து கொள்ளவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் முடியும். கால்நடைகளுக்காகப் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் பூர்னியாவில் ரூ.84 கோடி மதிப்பில் 75 ஏக்கரில் பிஹார் அரசு திட்டம் உருவாக்கியுள்ளது.
இந்தத் திட்டங்களைத் தொடங்கிவைத்தபின், விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த ரூ.20 ஆயிரம் கோடி திட்டத்தில் ரூ.12,340 கோடி கடல்சார் திட்டங்களுக்காகவும், ரூ.7,710 கோடி மீன்வளர்ப்பு, மீன்பிடித்தல் முதலீட்டுக்கும், உள்கட்டமைப்புக்கும் ஒதுக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விவசாயிகளிடம் பேசுகையில், “கரோனா வைரஸை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அனைவரும் முக்கவசம் அணிய வேண்டும் எனும் விதியைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி புழக்கத்துக்கு வரும் வரை, சமூக விலகலைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.
இந்த விஷயங்களை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். முகக்கவசத்தை கண்டிப்பாக அணிதலையும், 2 அடி இடைவெளி விட்டு நிற்பதையும் கடைப்பிடிக்க வேண்டும்.
பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியத்தைக் கடைப்பிடியுங்கள். குடும்பத்தில் முதியோர்களை கவனத்துடன் பார்த்துக்கொள்ளுங்கள். இவை அனைத்தும் முக்கியம். கரோனா வைரஸை எளிதாகக் கருதாதீர்கள்” எனத் தெரிவித்தார்.