

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் வங்கிக் கடன் பெற்றவர்கள் கடனைச் செலுத்தும் தொகைக்கு கூட்டுவட்டி வசூலிக்கும் விவகாரத்தில் காலக்கெடு நீட்டிப்பது இதுதான் கடைசி வாய்ப்பு. அதற்குள் மத்திய அரசு வட்டிக்கு வட்டி விதிக்கும் விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியது.
அதேசமயம், ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வாராக் கடனாக அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள் அனைத்தையும், மறு உத்தரவு வரும் வரை வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது எனும் உத்தரவு தொடரும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர்க் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், கடனுக்கான வட்டியைச் சேர்த்து வசூலிக்கும்போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு கடன், வட்டி சுமை அதிகரிக்கும். இதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். சலுகை என்றால் குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலி யுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “கடன் தவணைகள் செலுத்தும் காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். ஆனால், வட்டிக்கு வட்டி விதிப்பதை ரத்து செய்வது குறித்து வங்கிகளின் தலைவர்கள், ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவை ஆலோசித்த பின்புதான் தெரிவிக்க முடியும். அதற்கு அவகாசம் தேவை” எனக் கோரினார்.
இதையடுத்து, ஆகஸ்ட் 31-ம் தேதிவரை வாராக் கடனாக அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள் அனைத்தையும், மறு உத்தரவு வரும் வரை வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி விதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறது என்று நீதிபதிகள் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு துஷார் மேத்தா கூறுகையில், “நிவாரணம் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் அரசு உயர்ந்த முக்கியத்துவம் கொடுத்து பரிசீலித்து வருகிறது. கரோனாவால் பல்வேறு துறைகள் சிக்கலில் இருப்பதால் இன்னும் இரு வாரங்களில் உரிய முடிவு எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க வல்லுநர்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அனைத்தும், முழுமையாக பரிசீலிக்கப்படும். எப்படியாகினும் 2 அல்லது 3 சுற்று பேச்சு நடத்த வல்லுநர்கள் குழுவுக்கு அவகாசம் தேவைப்படும் என்பதால்தான் 2 வாரம் அவகாசம் கேட்கிறோம். அனைத்து வங்கிகளின் தலைவர்களுடனும், ரிசர்வ் வங்கியுடனும் ஆலோசிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அமர்வு “ கூட்டுவட்டி விதிக்கும் விவகாரத்தில் தெளிவான முடிவை எடுங்கள். மீண்டும் நாங்கள் இந்த வழக்கை ஒத்திவைக்க மாட்டோம். இது நாங்கள் உங்களுக்கு வழங்கும் கடைசி வாய்ப்பு” எனத் தெரிவித்தார்.
ரியல் எஸ்டேட் கூட்டமைப்பான கிரிடாய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிடுகையில், “ தற்போது அரசு அளித்து கடன் சீரமைப்புத் திட்டங்கள் 95 சதவீத கடனாளிகளுக்கு நிவாரணம் அளிக்காது. கடன் பெற்றவர்களைத் தரம் தாழ்த்துவதிலிருந்து பாதுகாக்க வேண்டும். கடன் செலுத்தும் காலத்தை அதிகப்படுத்த வேண்டும், வட்டிக்கு வட்டி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தத்தா வாதிடுகையில், “வங்கிகள் கூட்டுவட்டி வசூலித்துக் கொண்டு கடன் சீரமைப்பும் செய்கின்றன. இதில் எதை முதலில் செய்வார்கள். வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி விதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் மருத்துவனைகளிலும், பலர் வேலையிழந்தும் உள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
அப்போது வங்கிகள் சார்பில் ஆஜரான வழக்கிறஞர் ஹரிஸ் சால்வே, “ஒட்டுமொத்த வங்கி அமைப்பும் கூட்டுவட்டியில்தான் இயங்குகிறது. அதைத்தான் இப்போதும் செய்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, “2 வாரங்களுக்குள் கூட்டுவட்டி விதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அனைத்து விஷயங்களையும் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கிறோம். இரு வாரங்களுக்குள் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பதில்மனுத்தாக்கல் செய்ய வேண்டும். வழக்கை செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்” என உத்தரவிட்டனர்.