

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள், அம்பாலா விமானப்படைத் தளத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு லடாக்கில் உள்ள இந்திய-சீனா எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ரஃபேல் போர்விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது, விமானப்படைக்கு மிகப்பெரிய ஊக்கத்தையும், பலத்தையும் அதிகரிக்கும்.
அம்பாலா விமானப்படைத்தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ப்ளோரன்ஸ் பார்லே, முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி ஆர்கேஎஸ் பகதூரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
5 ரஃபேல் விமானங்களுக்கும் அனைத்து மதத்தின் வழக்கப்படி, சர்வ தர்ம பூஜை நடந்தது. 5 விமானங்களையும் வரவேற்கும் விதத்தில் நீரை வானில் பீய்ச்சி அடித்து வணக்கம் செலுத்தி வரவேற்பு அளிக்கப்பட்டு, விமானப்படையின் 17 படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது.
இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “ இந்திய விமானப்படை புதிய பறவைகளை வரவேற்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது.
ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப்பின் முதல்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தடைந்தன.
10 விமானங்கள் முதல்கட்டமாக தயாராக இருந்த நிலையில் 5 விமானங்கள் இந்திய வீரர்களின் பயிற்சிக்காக பிரான்ஸில் வைக்கப்பட்டுள்ளன. 2-ம் கட்டமாக வரும் விமானங்கள் மேற்கு வங்கம் ஹசிமரா தளத்திலும் நிறுத்தப்படும்.
2021-ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவுக்கு வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரஃபேல் போர் விமானம் அதிநவீனத்துடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கை குறிவைத்து தாக்குதல், ஏவுகணை இடைமறித்து தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் ரஃபேல் விமானத்தில் உள்ளன.