

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு மேதக் மாவட்டத்தில் 112 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதற்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக, மாவட்ட கூடுதல் ஆட்சியர் நாகேஷை தொடர்பு கொண்டார். அவர் ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.12 கோடிலஞ்சம் கேட்டுள்ளார்.
முன்பணமாக ரூ.40 லட்சத்தை மூர்த்தி வழங்கியுள்ளார். மீதமுள்ள ரூ.72 லட்சத்துக்கு பதில் மூர்த்தியின் 5 ஏக்கர் நிலத்தை தனது பினாமியான ஜீவன் கவுட் என்பவரது பெயரில் பத்திரத்தை மாற்றச் செய்தார் கூடுதல் ஆட்சியர் நாகேஷ்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையினர், நாகேஷை மச்சாவரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று காலையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மாவட்ட கூடுதல் ஆட்சியர் நாகேஷ் மட்டுமின்றி இதில் தொடர்புடைய மேதக் கோட்டாட்சியர் அருண் ரெட்டி, தாசில்தார்உட்பட மேலும் சில வருவாய்த் துறை அதிகாரிகளின் வீடுகள்,அலுவலகங்கள் என ஒரே நேரத்தில் 12 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், முன்பணமாக வழங்கப்பட்ட ரூ.40 லட்சம் மற்றும் மூர்த்திக்கு சொந்தமான நிலப் பத்திரங்கள் உட்பட மேலும் சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பிசூரிய நாராயணா செய்தியாளர் களிடம் தெரிவித்தார். என். மகேஷ்குமார்