விமானப் படையில் ‘ரஃபேல்’ இன்று முறைப்படி இணைகிறது: பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்பு

புளோரன்ஸ் பார்லி
புளோரன்ஸ் பார்லி
Updated on
1 min read

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 5 விமானங்கள் கடந்த ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தடைந்தன. ரஃபேல் விமானங்களை இந்திய விமானப் படையில் முறைப்படி இணைக்கும் நிகழ்ச்சி, ஹரியாணா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப் படை தளத்தில் இன்று நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் பங்கேற்று விமானங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பாரம்பரிய சர்வ தர்ம பூஜையை தொடர்ந்து, ரஃபேல், தேஜாஸ் மற்றும் சராங் விமானங்களின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிறகு ரஃபேல் விமானத்தின் மீது வாட்டர் சல்யூட் எனப்படும் தண்ணீரை பீய்ச்சியடித்து மரியாதை செலுத்தப்பட உள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லியும் பங்கேற்க உள்ளார். இதுகுறித்து டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் புளோரன்ஸ் பார்லி இந்தியாவில் இன்று அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். ரஃபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பை இந்திய விமானப் படை சேர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கடந்த 2017-ல் இருந்து இந்தியாவில் பார்லி மேற்கொள்ளும் 3-வது அரசு முறைப் பயணம் இதுவாகும். மேலும் கரோனா பாதிப்புக்கு பிறகு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை பார்லி தனது இந்தப் பயணத்தில் வலுப்படுத்துவார்” என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in