Published : 10 Sep 2020 06:37 AM
Last Updated : 10 Sep 2020 06:37 AM

குஜராத்தில் கழுதை பால் ஒரு லிட்டர் ரூ.7,000

வதோதரா

குஜராத்தில் ஒரு லிட்டர் கழுதை பால் ரூ.7,000-க்கு விற்கப்படுகிறது. இது சாதாரண கழுதையினுடையது அல்ல. ஹலாரி வகையை சேர்ந்தது.

கழுதை பால் பற்றி நிறைய கதைகள் இருக்கின்றன. பிறந்த குழந்தைக்கு கழுதை பால் கொடுத்தால், நல்ல குரல் வளம் இருக்கும் என்று நம்புகின்றனர். பண்டைய எகிப்தின் ராணியாக இருந்த கிளியோபட்ரா, தனது அழகு மற்றும் இளமையைப் பாதுகாத்துக் கொள்ள கழுதை பாலில் குளித்தார் என்ற கதையும் உள்ளது. கழுதை பால் வயதாவதை தடுக்கிறது, தோல் சுருக்கம் அடைவதைத் தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது, உடல் செல்களை புதுப்பிக்கிறது என்றெல்லாம் கூறுகின்றனர். அந்தளவுக்கு கழுதைப் பாலுக்கு முக்கியத்துவம் உள்ளது.

அதை நிரூபிக்கும் வகையில் குஜராத்தில் ஒரு லிட்டர் கழுதை பால் ரூ.7,000-க்கு விற்பனையாகிறது. இது சாதாரண கழுதையினுடையது அல்ல. ‘ஹலாரி’ வகை கழுதை. இது வெள்ளை நிறத்தில் இருக்கும். மூக்கு மற்றும் கால் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும். உடல் வலிமை உள்ளவை. சாதாரண கழுதையை விட சற்று பெரிதானது. குதிரைகளை விட சற்று உயரம் குறைந்தது. பார்ப்பதற்கு குதிரை போலவே இருக்கும். ரோமங்கள் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு 40 கி.மீ. தூரம் வரை கூட நடக்கும் திறன் படைத்தது.

இந்த வகை கழுதைகள் குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இந்த கழுதைகளின் பால்தான் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. உண்மையில் இந்தப் பாலை தங்க திரவம் என்றே சொல்லலாம்.

குதிரைகளுக்கான தேசிய ஆராய்ச்சி மையம் (என்ஆர்சிஇ), ஹரியாணாவின் ஹிசார் பகுதியில் கழுதை பால் பண்ணை அமைக்கும் புதுமையான திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

மத்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகரித்த தேசிய விலங்குகள் மரபணு ஆதார அமைப்பு (என்பிஏஜிஆர்) 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஹலாரி வகை கழுதைகளை வகைப்படுத்தி அங்கீகரித்தது. இந்த வகை கழுதைகள் சவுராஷ்டிரா பகுதியில் கடந்த 200 ஆண்டுகளாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கழுதைகளுக்கு தற்போது தேசிய அந்தஸ்து வழங்கப்பட்டதால், அவற்றைப் பாதுகாக்கவும், அந்த மரபணுக்களை பாதுகாக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பட்டான் மாவட்டத்தில் உள்ள சனாஸ்மா குதிரை பண்ணையில், ஹலாரி வகை கழுதைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து 11 கழுதைகள் என்ஆர்சிஇ-க்கு வழங்கப்பட்டுள்ளன என்று ஆனந்த் வேளாண் பல்கலைக்கழக விலங்குகள் மரபணு மற்றும் இனப்பெருக்க துறையைச் சேர்ந்த டாக்டர் டி.என்.ரேங்க் கூறியுள்ளார். பால் பண்ணை அமைப்பதற்கு ஏற்ப இந்த வகை கழுதைகளை இனப்பெருக்கம் செய்யப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைக்கு குஜராத்தின் 2 மாவட்டங்களில் 1,112 ஹலாரி வகை கழுதைகள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பால் மேற்கத்திய நாடுகளில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு லிட்டர் ரூ.7,000 வரை விற்கப்படுகிறது. இந்த கழுதை பாலில் சோப்பு, தோல் பராமரிப்பு ஜெல்கள், முகம் கழுவுவதற்கான ஜெல்கள் போன்ற அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x