Published : 10 Sep 2020 06:30 AM
Last Updated : 10 Sep 2020 06:30 AM

பாங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.173.63 கோடி கடன் வாங்கி மோசடி: குஜராத் நகை உரிமையாளர் மீது சிபிஐ வழக்கு

அகமதாபாத்

பாங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.173.63 கோடி கடனைப் பெற்று திரும்ப செலுத்தாமல் ஏமாற்றியதாக குஜராத் நகை வர்த்தகர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

வதோதராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ முக்த் ஜூவல்லர்ஸ் பரோடா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஹர்ஷ் சோனி மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

வங்கியில் கடன் பெற்று தலைமறைவாகி விட்டதாக ஹர்ஷ் சோனி மீது பாங்க் ஆப் பரோடா சார்பில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் அதன் நிறுவனர் மற்றும் சிலர் மீது ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கியில் கடனைப் பெற்று அதை வேறு பணிகளுக்கு பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனத்துக்கு கடன் உத்தரவாத கடிதத்தை 2013-ம் ஆண்டில் இருந்து பாங்க் ஆப் பரோடா அளித்து வந்துள்ளது. அதேபோல வங்கியில் கடனும் அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாததால் 2016-ம் ஆண்டு முதல் இது வாராக் கடனாக மாறியது. கடனை திரும்ப செலுத்துவதற்கு போதிய வசதி இருந்தும், கடனை திரும்ப செலுத்தாதவராக (வில்ஃபுல் டிபால்டர்) இவர் 2018-ல் கருதப்பட்டார். 2019 மார்ச் 31 நிலவரப்படி வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.173.63 கோடியாகும்.

தங்க நகை ஆபரணங்களை வாங்குவதாக தெரிவித்த 3 நிறுவனங்களிலும் பொதுவான இயக்குநர்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதில் 2 இயக்குநர்களின் முகவரி ஒரே முகவரியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு சப்ளை நிறுவனமான மெசர்ஸ் பி கோல்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. மாறாக அது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று பண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளன. கடன் உத்திரவாத வசதியை இவை தவறாக பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

மேலும் நிறுவனம் மிக அதிகளவில் வர்த்தகம் புரிவதாக பொய்யான நிதி அறிக்கை தயாரித்து அதன்மூலம் கடன் பெற்றிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடனை திரும்ப செலுத்தாததால் 2016 முதல் வாராக் கடனாக மாறியது. கடனை திரும்ப செலுத்துவதற்கு போதிய வசதி இருந்தும், கடனை திரும்ப செலுத்தாதவராக (வில்ஃபுல் டிபால்டர்) இவர் 2018-ல் கருதப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x