மாநிலங்களவையின் துணைத் தலைவர் தேர்தல்; வெற்றி யாருக்கு?- பாஜக எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத் தொடர் 14-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அன்றைய தினம் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி கொறாடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும்.

கரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை.

கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேள்வி நேரத்தை ரத்து செய்வது ஜனநாயகத்திற்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எனினும் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம் பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் மாநிலங்களவையின் துணைத் தலைவராக இருந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஸ் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய துணைத் தலைவரைத் தேர்வுசெய்ய தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அந்த பதவிக்கு பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஸ் நாராயணன் சிங் மீண்டும் பாஜக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஹரிவன்ஸ்
ஹரிவன்ஸ்

மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு, எதிர்க்கட்சிகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து கூட்டு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து பேசி ஒருமித்த முடிவு எட்டப்பட்டு வேட்பாளர் குறித்த தேர்வு இருக்கும் என முடிவெடுக்கப்பட்டது.

துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 14-ம் தேதி பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பாஜக சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

250 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு 80 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரஸுக்கு 40 எம்.பி.க்கள் உள்ளனர். 125 உறுப்பினர்களின் பலம் தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. எனினும் பிஜூ ஜனதாதளம், அதிமுக, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தர வாய்ப்பு இருப்தால் அக்கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in