Last Updated : 09 Sep, 2020 02:23 PM

 

Published : 09 Sep 2020 02:23 PM
Last Updated : 09 Sep 2020 02:23 PM

நாடு முழுவதும் எம்.பி. எம்எல்ஏக்கள் மீது 4,442 வழக்குகள்; விசாரணையில் 2,556: உயர் நீதிமன்றங்களின் புள்ளிவிவரத்தில் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி

நாடு முழுவதும் முன்னாள் மற்றும் பதவியில் இருக்கும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது 4 ஆயிரத்து 442 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 ஆயிரத்து 556 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றன என்று அனைத்து உயர் நீதிமன்றங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் முன்னாள் மற்றும் பதவியில் இருக்கும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி பாஜகவைச் சேர்ந்தவரும் வழக்கறிஞருமான அஸ்வானி உபாத்யாயே உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “நாடு முழுவதும் முன்னாள் மற்றும் பதவியில் இருக்கும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது இருக்கும் வழக்குகள், விசாரணையில் இருக்கும் வழக்குகள் விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். மாநில வாரியாக வழக்குகள் விவரங்களையும் அளிக்க வேண்டும். இந்த வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தது.

இதன்படி நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் சார்பில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சேகரிக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

உச்ச நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா அறிக்கை தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''உயர் நீதிமன்றம் அளித்த புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் முன்னாள் மற்றும் பதவியில் இருக்கும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது 4,442 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 2,556 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றன. 352 வழக்குகள் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2,556 வழக்குகளில் பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஏராளமான எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், ஒன்று முதல் பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளவர்களாகவும், ஒரு சிலர் மீது பல்வேறு வகையான வழக்குகளும் உள்ளன.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவால், பல்வேறு மாநிலங்களில் 352 வழக்குகள் விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சிறை வழங்கும் குற்றத்துக்கு இணையாக 413 வழக்குகள் உள்ளன. இதில் 174 எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக 1,217 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 446 பேர் தற்போது பதவியில் இருப்பவர்கள். பிஹாரில் 531 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் தற்போது பதவியில் இருக்கும் 256 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது பெரும்பாலும் ஊழல் தடுப்புச் சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டம், ஆயுதத் தடைச்சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் வழக்கு, அவதூறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

வழக்குகளை விரைவாக முடிக்க பல்வேறு ஆலோசனைகளை இதில் முன்வைத்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கி வழக்குகளை விசாரிக்க வேண்டும். இதை மாநில உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழங்குவதற்குத் தகுதியுள்ள வழக்குகளை முன்னுரிமை கொடுத்து சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும். அதன்பின் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கக்கூடிய வழக்குகளை எடுத்து விரைவு நீதிமன்றங்கள் விசாரிக்கலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடுத்து விரைவாக விசாரிக்கலாம். இந்த விசாரணைகள் அனைத்தும் நாள்தோறும் நடக்க வேண்டும்.

முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை முதலில் விசாரிப்பதை விட, பதவியில் இருப்போர் மீதான வழக்குகளை முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டும்.

சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து நாட்டில் உள்ள தடயவியல் ஆய்வகங்கள் செயல்பட வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x