

ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் அதிவேக 4ஜி இணையதள இணைப்பு இப்போதைக்கு வழங்குவதற்குச் சாத்தியமில்லை. சோதனை முயற்சியாக காந்தர்பால், உதம்பூருக்கு வழங்கப்பட்டுள்ள அதிவேக இணையதள இணைப்பு இம்மாதம் வரை தொடரும் என்று மாநில நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.
உதம்பூர், காந்தர்பால் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4ஜி இண்டர்நெட் இணைப்பால் இதுவரை எந்தவிதமான அசம்பாவிதங்களும், தீவிரவாதச் சம்பவங்களும் நடக்கவில்லை என்பதால், இம்மாதம் வரை தொடரும் என்று மாநில முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்படுவதற்கு முதல் நாள் இரவு மாநிலம் முழுவதும் இண்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஜனவரி 25-ம் தேதி 2ஜி இண்டர்நெட் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4ஜி இண்டர்நெட் சேவையைத் தொடங்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குறிப்பிட்ட இடங்களில் மீண்டும் 4ஜி இண்டர்நெட் சேவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டம், ஜம்முவில் உள்ள காந்தர்பால் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி இரவு முதல் 4ஜி சேவை பரிசோதனை முறையில் மீண்டும் வழங்கப்பட்டது. ஏறக்குறைய ஓராண்டுக்குப் பின் மீண்டும் அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,மாநில உள்துறை அமைசச்கத்தின் முதன்மைச் செயலாளர் ஷாலீன் காப்ரா நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:
“ஜம்மு காஷ்மீர் முழுமைக்கும் அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்குவது சாத்தியமில்லை. தற்போது வழங்கப்பட்டுள்ள உதம்பூர், காந்தர்பால் மாவட்டங்களுக்கு இம்மாதம் இறுதிவரை அதிவேக இணையதள இணைப்பு தொடரும்.
ஆனால், மற்ற மாவட்டங்களுக்கு அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்கினால், பல்வேறு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் உருவாகும், தீவிரவாதிகள் மீண்டும் தலையெடுக்கும் சூழல் உருவாகும் என பாதுகாப்புத் துறையினருக்கு நம்பகத்தன்மையான தகவல்கள் கிடைத்துள்ளன.
இளைஞர்களை மூளைச்சலவை செய்து, அவர்களைத் தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதற்கு அதிவேக இணையதள சேவையைத் தீவிரவாதிகள் பயன்படுத்தக்கூடும், பல்வேறு தகவல்களையும், வீடியோ, படங்கள் போன்றவற்றை அனுப்பி இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடும் வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தன.
அதிவேக இணையதள இணைப்பை மாநிலம் முழுவதும் வழங்கினால் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பாதுகாப்புப் பிரிவினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழல்களை ஆய்வு செய்ததையடுத்து, இரு மாவட்டங்களுக்கு மட்டும் அதிவேக இணைப்பு தொடர்ந்து இம்மாத இறுதிவரை வழங்கப்படும், மற்ற 18 மாவட்டங்களுக்கு 2ஜி இணைப்பு மட்டுமே இருக்கும். தேவைப்பட்டால், சூழலுக்கு ஏற்ப இந்த உத்தரவு மாற்றியமைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.