Published : 09 Sep 2020 10:16 AM
Last Updated : 09 Sep 2020 10:16 AM

இந்திய ஊடகம் உலகளாவிய நற்பெயரை பெற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி

ஒவ்வொரு சர்வதேச அமைப்பிலும் இந்தியா மிக வலுவான இடத்தை பெற்றுள்ள நிலையில், இந்திய ஊடகமும் உலகளாவிய நற்பெயரை பெறுவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், ஜவஹர்லால் நேரு சாலையில்‘பத்ரிகா குரூப் ஆப் நியூஸ்பேப்பர்ஸ்’ நிறுவனம் சார்பில் ‘பத்ரிகா கேட்’ என்ற வாயில் சின்னம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் பத்ரிகா குரூப் ஆப் நியூஸ் பேப்பர்ஸ் தலைவர் குலாப் கோத்தாரி எழுதிய 2 நூல்களை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:

எந்தவொரு சமூகத்திலும் அறிவார்ந்தவர்களும் எழுத்தாளர்களும் சமூகத்துக்கு வழிகாட்டியாக விளங்குகின்றனர். பள்ளிப்படிப்பு குறிப்பிட்ட பருவத்தில் முடிவுக்கு வரலாம். ஆனால் கற்றல் நடைமுறை வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் தொடர்கிறது. நூல்களும் நூலாசிரியர்களும் இதில் முக்கியப் பங்குவகிக்கின்றனர்.

நாம் நமது வீட்டில் வழிபாட்டுக்கு என்று ஓர் இடத்தை ஒதுக்குவது போல், நூல்கள் மற்றும் அவற்றை படிப்பதற்கு என ஓரிடத்தை ஒதுக்கவேண்டும். புத்தகம் படிக்கும் வழக்கத்தை குடும்ப உறுப்பினர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய தயாரிப்புகள் மட்டுமல்ல, இந்தியாவின் குரலும் தற்போது உலக அளவில் அதிக கவனம் பெற்று வருகிறது. ஒவ் வொரு சர்வதேச அமைப்பிலும் இந்தியா மிக வலுவான இடத்தை பெற்றுள்ள நிலையில், இந்திய ஊடகமும் உலகளாவிய நற்பெயரை பெறுவது அவசியம்.

உலகின் பல்வேறு நாடுகளில் வழங்கப்படுவது போன்று இந்திய நிறுவனங்கள் இலக்கிய விருதுகளை வழங்க வேண்டும். இது காலத்தின் தேவை மற்றும் நாட்டுக்கு அவசியமானது ஆகும். கரோனா பரவல் காலத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அரசுப் பணிகளை ஆய்வுசெய்து குறைகளை சுட்டிக்காட்டி யும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊடகங்கள் செயல் பட்டன.

சில சமயங்களில் ஊடகங்களும் விமர்சிக்கப்படுகின்றன என்றாலும் சமூக ஊடகங்களின் இந்த யுகத்தில் ஒவ்வொருவரும் விமர்சனங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தூய்மை இந்தியா இயக்கம், ஏழைப் பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு வழங்கும் உஜ்வாலா திட்டம், ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் நீர் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் தொடர்பாக மக்களிடையே ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தின.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x