

பெங்களூருவில் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தினமும் பாடம் கற்பிப்பது மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.
பெங்களூரு அன்னப்பூர்ணேஸ் வரி நகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் சாந்தப்பா ஜடமனவர் (32). இவர் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள விநாயக் நகரில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆன்லைன் மூலம் பாடம் கற்க போதிய வசதி இல்லாமல் இருப் பதை கவனித்துள்ளார்.
இதனால் தானே சொந்தமாக கரும்பலகை, நோட்டு புத்தகங்கள்வாங்கி, வீதியிலேயே மாணவர் களை வரிசையாக அமர வைத்துமாலை வேளையில் பாடம் கற்பித்து வருகிறார். சாந்தப்பாவிடம் முதலில்10 மாணவர்கள் பாடம் கற்றநிலையில், தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சாந்தப்பா ஜடமனவர், ‘இந்துதமிழ்’ நாளிதழிடம் கூறுகையில்,‘‘கரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப் பதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் கற்பிக்கப்படுகிறது. எங்கள் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களிடம் செல்போன், மடி கணிணி, இணையதள வசதி இல்லை.
இதனால் மாணவர்களால் முறையாக படிக்க முடியாத சூழ்நிலைநிலவுகிறது. இந்த பிள்ளைகளின் பெற்றோர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதால் அவர்களால் மடி கணிணி வாங்க முடியவில்லை. எனவே நான் என்னால் முடிந்த உபகரணங்களைக் கொண்டு மாணவர்களுக்கு மரத்தடியிலும், சாலையோரத்திலும் பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். 25 மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் தினமும் பாடம் கற்கின்றனர். நானும் ஏழை குடும்ப பின்னணியில் இருந்து வந்ததால் இந்தமாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என விரும்புகிறேன். அவர்களின் கல்விக்கு நான் ஒரு கருவியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’என்றார்.
சப் இன்ஸ்பெக்டர் சாந்தப்பாவின் கல்வி சேவை தொடர்பானசெய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதை அறிந்த கர்நாடக தொடக்கக் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் விநாயக் நகருக்கு நேரில் சென்று சாந்தப்பாவை சந்தித்து, பாராட்டு தெரிவித்தார். மேலும் ‘காவல் நிலையத்தில் காவல் பணி செய்துகொண்டே கல்வி பணியும் செய்யலாம். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் சாந்தப்பாவை மிகவும்பாராட்டுகிறேன்’என சமூக வலைத்தளங்களில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். இதனால் சாந்தப்பாவுக்கு சமூக வலைத்தளங் களிலும் பாராட்டு குவிகிறது.