தட்டச்சு இயந்திரம் நொறுக்கப்பட்ட உத்தரப்பிரதேச முதியவருக்கு ரூ.1 லட்சம் நிதி

தட்டச்சு இயந்திரம் நொறுக்கப்பட்ட உத்தரப்பிரதேச முதியவருக்கு ரூ.1 லட்சம் நிதி
Updated on
2 min read

உ.பி.யின் தலைநகரான லக்னோவில், தலைமை தபால் நிலையம் அருகே கிருஷ்ணகுமார் என்ற 65 வயது முதியவர், கடந்த சுமார் 35 ஆண்டுகளாக இந்தி தட்டச்சு இயந்திரத்தை வைத்து ‘ஜாப் டைப்பிங்’ செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக் கிழமை மதியம் இங்கு வந்த அப்பகுதி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் பிரதீப்குமார், இடத்தை காலி செய்யுமாறு முதியவரிடம் கூறியுள்ளார்.

மேலும் தட்டச்சு இயந்திரத்தை பிடுங்கி சாலையில் எறிந்துள்ளார். இது இணைய தளங்களில் பரவி கண்டனக் குரல்கள் எழுந்தன.

அதன்பின் முதல்வர் அகிலேஷ் யாதவின் உத்தரவின் பேரில் பிரதீப் குமார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் உத்தரவின் பேரில் லக்னோ மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் மற்றும் காவல்துறை கண்காளிப்பாளர் ராஜேஷ் பாண்டே ஆகியோர் லக்னோவின் கோமதி நகர் பகுதியிலுள்ள கிருஷ்ணகுமாரின் வீட்டுக்கு சென்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் 2 தட்டச்சு இயந்திரங்களை வழங்கினர். இதில் இந்தி தட்டச்சு இயந்திரத்தை மற்றும் பெற்றுக்கொண்டு ஆங்கில தட்டச்சு இயந்திரத்தை திருப்பி ஒப்படைத்துள்ளார் அந்த முதியவர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் முதியவர் கிருஷ்ணகுமார் கூறும்போது, “எனது ஒரே மகன் மணமாகியும் பணி கிடைக்காமல் இருப்பதால் எனக்கு தட்டச்சில் கிடைக்கும் ரூ100 வரையிலான பணத்தில் குடும்பத்தை காப்பாற்றி வந்தேன்.

நான் கெஞ்சியும் கேளாமல் தட்டச்சு இயந்திரத்தை உடைத்து விட்டார் அந்த சப்-இன்ஸ்பெக்டர். எனது மகன் வயதில் உள்ளதால், அவரை நான் மன்னித்து விட்டேன். இதற்கு மேல் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தேவை இல்லை என வலியுறுத்துவேன்” என்றார்.

சுமார் 35 வருடங்களுக்கு முன் 10 ஆம் வகுப்பு முடித்த கிருஷ்ணகுமார் அரசு பணிக்கு விண்ணப்பிக்க வேண்டி இந்த தலைமை தபால் அலுவலகம் வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அவரை போல் பலநூறு இளைஞர்கள் அங்கு விண்ணப் பிக்க வருவதை பார்த்தவர் ஒரு தட்டச்சு இயந்திரத்தை வாங்கி தபால் நிலையம் முன் அமர்ந்து தொழிலை துவக்கி உள்ளார். இவரது செய்தியை படித்த பலரும் முதியவர் கிருஷ்ணகுமாருக்கு நிதி உதவியும் செய்ய முன் வந்துள்ளனர். இவருக்காக சில இணையதளங்கள் நிதி உதவி திரட்டி வருகின்றன.

இந்நிலையில் முதியவர் கிருஷ்ணகுமாரின் ஏழ்மை நிலை குறித்து அறிந்த முதல்வர் அக்லேஷ், அவருக்கு அரசு சார்பில் ரூ. 1 லட்சம் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

மிரட்டல்

இதைத்தொடர்ந்து நேற்று மாலை கிருஷ்ணகுமாரின் கைப்பேசியில் ஒரு மிரட்டல் வந்துள்ளது. இதில் உ.பி. போலீஸ் சார்பில் பேசுகிறேன் என்று கூறிய ஒருவர், “உன்னை பற்றிய செய்திகள் வெளியாகும் வரை தான் உனக்கு பாதுகாப்பு. அதன் பிறகு உன்னை என்ன செய்கிறோம் பார்?” என மிரட்டியதாக கிருஷ்ணகுமார் கூறுகிறார்.

இது குறித்து போலீஸில் புகார் செய்ய கிருஷ்ணகுமார் மறுத்து விட்டாலும் அவரது சார்பில் தெய்னிக் பாஸ்கர் செய்தியாளர்கள் லக்னோவின் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் பாண்டேவின் கவனத் துக்கு கொண்டு சென்றுள் ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in