

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியாக குறைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு நேரத்தை வீண்டிப்பது மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு முரணானது, அணை பாதுகாப்பாக உள்ளது, முல்லை பெரியாறு அணையின் நீரை 130 அடியாக குறைத்து தேக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
கடந்த 2018 -ம் ஆண்டு பெய்த பெருமழை காரணமாக, முல்லை பெரியாறு அணை 142.20 அடியை எட்டியது. அந்த நேரத்தில், அணை உடைந்துவிடும் அபாயம் உள்ளதாகக் கூறியும், அப்படி நடந்தால், லட்சக்கணக்காண கேரள மக்கள் இறந்துவிடுவார்கள் எனக் கூறியும், வழக்கறிஞர் ஜாய், அணையில் நீர் மட்டத்தைக் குறைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணை முடிவில், அணையின் நீர் மட்டத்தை 139.9 அடியாக குறைக்க தமிழக அரசிற்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
அதனை அடுத்து அணையின் நீர் மட்டம் குறைக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்துவரும் நிலையில், நீர்மட்டத்தை 130 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது, மக்களின் பாதுகாப்பை கருதி பருவ மழை காலமாக ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முல்லைப்பெரியாறு அணையின் நீரை 130 அடியாக குறைத்து தேக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோய் கடந்த ஆகஸ்டு 1-ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதற்கு தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பருவமழை காலத்தில் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 130 அடியாக குறைத்து நீரை தேக்ககோரி கேரளாவை சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது:
தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “உச்சநீதிமன்றம் கடந்த 2006, 2014 மற்றும் 2018 உத்தரவுகளின் அடிப்படையில் தான் அணையில் நீர் தேக்கப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாகவும் தான் உள்ளது,
அணையை கண்காணிப்பதற்காவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் ஏற்படுத்தப்பட்ட மேற்பார்வை குழு முல்லை பெரியாறு அணையை கண்காணித்து வருகிறது. மேலும் மனுதாரர் ரசூல் ஜாய் கூறியது போன்ற எந்த அபாயத்தையும் மேற்பார்வை குழு கண்டறியவில்லை.
மாறாக அணை பாதுகாப்பாக உள்ளது, நிலநடுக்கத்தை தாங்கும் உறுதியுடையது என மேற்பார்வை குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பை கருதி பருவ மழை காலமாக ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முல்லை பெரியாறு அணையின் நீரை 130 அடியாக குறைத்து தேக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது.
அப்படி 130 அடியாக குறைத்து நீரை தேக்க கூறுவது கடந்த 2014-ல் உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிரானது. மேலும் மழை காலங்களில் தான் நீரை தேக்க முடியும், அப்படி தேக்கப்படும் நீர் பின்னாளில் பயன்படுத்தப்படும். இந்த அணையின் நீரை குறைத்தால், அது இந்த அணையை நம்பி இருக்கும் மக்கள் கடும் பாதிப்படைவர், வறட்சி பாதிப்பு ஏற்படும்.
அதேபோல மனுதாரர் தனது மனுவில் அணை அமைந்துள்ள பகுதிகளில் 62 நிலநடுக்கம் வந்ததாக கூறியுள்ளார் அது தவறானது, ஏனெனில் அப்பகுதிகளில் 21 நில அதிர்வுகள் தான் ஏற்பட்டுள்ளது, அதுவும் 2.8 ரிக்டர் அளவுக்கும் கீழாகவே நிலஅதிர்வுகள் தான் ஏற்பட்டுள்ளது. மேலும் அணை கட்டிய ஆண்டுகளை பார்ப்பதை விட அணையின் உறுதித்தன்மையை தான் கணக்கில் கொள்ள வேண்டும், அவ்வகையில் முல்லை பெரியாறு அணை உறுதியாக உள்ளது..
இந்த மனு, நேரத்தை வீண்டிப்பது மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு முரணானது எனவே ரசூல் ஜாய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என பதில் மனுவில் தெரிவித்துள்ளது.