Last Updated : 08 Sep, 2020 03:32 PM

 

Published : 08 Sep 2020 03:32 PM
Last Updated : 08 Sep 2020 03:32 PM

தீவிரமாகும் மோதல் : நடிகை கங்கனா ரனாவத்தின் சொகுசு இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டிய மும்பை மாநகராட்சி 


பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு சொந்தமாக மும்பையில் உள்ள சொகுசு இல்லம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி 24 மணிநேரத்துக்குள் பதில் அளி்கக் கோரி மும்பை மாநகராட்சி இன்று நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளது.

மகாராஷ்டிரா, மும்பை குறித்து கடுமையாக விமர்சித்து பேசியதைத் தொடர்ந்து சிவேசனாவின் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரனாவத்துக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் வெடித்தது. இந்த மோதல் கங்கனா ரனாவத்தின் வீட்டுக்கு நோட்டீஸ் ஒட்டும்வரை நீண்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி அவரின் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

பாந்த்ராவில் உள்ள கங்கனாவின் இல்லம் : படம் ஏஎன்ஐ

பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும், திரைமறைவில் இருக்கும் மாஃபியாக்கள் குறித்தும் சமீபத்தில் கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தவிர சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரனாவத்துக்கும் இடையே கடந்த இரு நாட்களா ட்விட்டரில் கடுமையாக வாக்குவாதம் நடந்தது.

மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு கங்கனா மன்னிப்புக் கோர வேண்டும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

மேலும், நடிகை கங்கனா ரனாவத்தின் பேச்சுக்கு மகாராஷ்டிரா அரசியல்கட்சித் தலைவர்கள் மத்தியிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும்கண்டித்த நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவும் இன்று மறைமுகமாகச் சாடினார்.

இதனால் நடிகை கங்கனா ரனாவத்துக்கும், மகாராாஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையிலான மோதல் வெடித்திருக்கிறது.

இதையடுத்து, நடிகை கங்கனா ரனாவத்துக்கு பாதுகாப்பு அளி்கக் கோரி அவர் சார்ந்த இமாச்சலப்பிரதேச அரசு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு நேற்று வழங்கியது.

கங்கனா ரனாவத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டபின் இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள் விமர்சித்திருந்தனர்.

கங்கனா வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்,

இந்த சூழலில் நடிகை கங்கனா ரனாவத் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ மும்பையில் இருக்கும் என்னுடைய வீடு, அலுவலகத்தில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் வந்து சட்டவிரோதக் கட்டிடம் எனக் கூறி இடிக்க முயன்றுள்ளனர் “ எனக் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மும்பை மாநகராட்சி சார்பில் ஒரு குழுவினர், பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கனா ரனாவத் வீட்டில் நோட்டிஸ் ஒட்டிச் சென்றனர். வீட்டில் யாரும் இல்லாததால் நோட்டீஸை வாங்கவில்லை, இதனால் வீட்டின் கதவில் ஒட்டிவிட்டுச் சென்றனர்.

அந்த நோட்டீஸில், “வீட்டில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கழிவறை அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. வீட்டின் மாடிப்படி அருகேகழிவறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளாதார என்பது குறித்து 24 மணிநேரத்தில் கங்கனா ரனாவத் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாந்த்ரா பகுதியில் முன்அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வது வழக்கம். அதுபோல் ஆய்வு செய்துள்ளார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x