Last Updated : 08 Sep, 2020 02:55 PM

 

Published : 08 Sep 2020 02:55 PM
Last Updated : 08 Sep 2020 02:55 PM

‘விமர்சனங்கள்தான் இந்தியாவின் ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன’: பிரதமர் மோடி பேச்சு

பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரி எழுதிய நூல்களை வெளியிட்ட பிரதமர் மோடி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி


விமர்னங்கள்தான் இந்திய ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன, இந்தியாவின் பொருட்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் குரல்களும் உலகளவில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.

பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரி எழுதிய நூல்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று வெளியிட்டு, பத்திரிகா கேட் பகுதியையும் திறந்து வைத்தார். இந்த நிகழச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

ஒவ்வொரு சர்வதேச அமைப்பிலும் நாடு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தும் போது, இந்திய ஊடகங்களும் உலகளவில் செல்வது அவசியம். நமது நாளேடுகள், பத்திரிகைகள் உலகளவிலான மதிப்பை, கவுரவத்தைப் பெற வேண்டும்.

இந்த டிஜிட்டல் காலத்தில், உலகம் முழுவதம் டிஜிட்டல் முறையில் நம் ஊடகங்கள் சென்றடைய வேண்டும்.

உலகின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்படுவது போல இலக்கிய விருதுகளை இந்திய நிறுவனங்கள் வழங்க வேண்டும். இந்த நேரத்துக்கு அவசியம், தேசத்துக்கு அத்தியாவசியமாகும்.

இந்திய ஊடகங்கள் நாட்டுமக்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் கரோனா காலத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சேவையாற்றி வருகின்றன. அரசின் பணிகளை ஆய்வு செய்து, மதிப்பிட்டு, குறைபாடுகளையும் சுட்டுக்காட்டுகின்றன.

சில நேரங்களில் ஊடகங்கள் விமர்சனம் செய்கின்றன. சமூகஊடகங்கள் இருக்கும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கிறது.

ஆனால், ஒவ்வொருவரும் விமர்சனங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். விமர்சனங்கள்தான் இந்திய ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன.

ஸ்வத் பாரத் இயக்கம், உஜ்வாலா திட்டம் போன்றவற்றை மத்திய அரசு அறிமுகம் செய்தபோது, அதுகுறித்து மக்களுக்கு கொண்டு சென்று ஊடகங்கள் விழிப்புணர்வு ஊட்டின.

தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை கொண்டு செல்வதிலும் ஊடகங்களின் பங்கு சிறப்பாக இருந்து வருகிறது.

கோத்தாரியின் சம்வாத் உபனிசத், அஸ்கர் யாத்ரா ஆகியவை இந்திய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், தத்துவங்களையும் போற்றுபவை. தற்போதுள்ள இளையதலைமுறை இந்த புத்தகங்களை கூகுள் குரு மூலம் தேடிப்படிப்பார்கள் என நம்புகிறேன்.

சமூக ஊடகங்கள் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் நமது புதிய தலைமுறை இளைஞர்கள் தீவிரமான அறிவைப் பெறுவதிலிருந்து விலகாமல் இருப்பது மிகவும் கட்டாயமாகும்.

வீடுகளில் வழிபாட்டுக்கு தனி அறையும் ஒதுக்கியதைப் போல், புத்தகங்களை வைப்பதற்கு தனி இடமும், படிப்பதற்கு தனி அறையும் வேண்டும்.

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் நாள்தோறும் சிலமணிநேரங்கள், புத்தகங்களில் சில பக்கங்களை படிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். வேதங்கள், உபநிஷதங்கள் ஆன்மீக மற்றும் தத்துவங்களோடு மட்டும் நிறுத்தவில்லை, பிரபஞ்சத்தையும், அறிவியலையும் வழங்குகின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x