

தெலங்கானா வருவாய்த் துறையில் ஊழல் அதிகரித்ததால், பத்திரப்பதிவு துறையில் மாற்றங்கள் செய்வதற்காக பத்திரப்பதிவு துறை அலுவலகங்கள் மூடப்பட்டன. மேலும், கிராம வருவாய் அதிகாரி பதவியையும் தெலங்கானா அரசு ரத்து செய்துள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இத்தொடர் வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று அவை தொடங்கியதும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட அமைச்சர்கள், உறுப்பினர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.
அப்போது, பிரணாபின் சாதனைகளையும், தெலங்கானா மாநிலத்துக்கு அவர் மூலம் மசோதா ஒப்புதல் பெற்றதையும் முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் நினைவு கூர்ந்தனர். அதன்பின்னர், பேரவையில் மிக முக்கியமான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதாவது, சமீப காலமாக வருவாய்த் துறையிலும், பத்திரப்பதிவு துறையிலும் கோடிக் கணக்கில் ஊழல் நடந்து வருவது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
தெலங்கானாவில் தாசில்தார்கள் பலர் மீது ஊழல் புகார்கள் உள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறைபல தாசில்தார்களை கைது செய்துவிசாரணை நடத்தி வருகிறது.இதற்கு கிராம வருவாய் அதிகாரிகளும் (விஆர்ஓ) உடந்தையாக உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், இனி கிராம நிர்வாக அதிகாரி பதவியையே ரத்து செய்வது என தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக நேற்று மதியம் 12 மணிக்குள் அனைத்து கிராம வருவாய் அதிகாரிகளும் தாசில்தார்களிடம் தங்களது ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், இனிவிவசாய நிலங்கள் மட்டும் தாசில்தார்கள் மேற்பார்வையிலும், வீட்டுமனை பட்டாக்கள் நேரடியாக உதவிபதிவாளர் மேற்பார்வையிலும் பத்திரப்பதிவு நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதுவும் அனைத்து பணிகளும்இனி ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மாற்றங்கள் பலவற்றை செய்ய சற்று கால அவகாசம் தேவைப்படும் என்பதால் இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை தெலங்கானா மாநிலத்தில் உள்ள 141 பத்திரப்பதிவு அலுவலகங்களும் மூடப்படவேண்டும் என வருவாய்த் துறைமுதன்மைச் செயலாளர் உத்தரவிட்டார். அதன்படி அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களும் மூடப் பட்டன.