

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் போஸ்டர்கள், பேனர்கள், ஸ்டிக்கர்கள், முகக்கவசங்கள், என்று பிஹாரில் பாஜக-வின் பண்பாட்டுப் பிரிவு கலா சன்ஸ்கிருதி மஞ்ச் களத்தில் இறங்கியுள்ளது.
இதில் திறவு வாசகம் என்னவெனில், ‘நாங்களும் மறக்கவில்லை, யாரையும் மறக்கவும் விடமாட்டோம்’ என்று சுஷாந்த் மரணத்தை தேர்தல் அரசியல் களத்துக்கு இறக்கியுள்ளது பாஜக.
இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, ‘புதிய இந்தியாவின் புதிய கீழ்மை’ சுஷாந்த் மரணத்தை வைத்து அரசியல் பிழைப்புவாதத்தில் இறங்கியுள்ளது பாஜக, இதன் மூலம் பிஹாரின் பல பிரச்சினைகளை திசைத்திருப்பப் பார்க்கிறது. இது கேவலமான அரசியல் என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக மெய்நிக்ர் செய்தியாளர்கள் சந்திப்பில் சுர்ஜேவாலா கூறியதாவது:
பாஜக மற்றும் பிரதமர் மோடி கூறிக்கொள்ளும் புதிய இந்தியாவின் புதிய கீழ்மை, பிஹாரில் வேலையில்லாத் திண்டாட்டம், கரோனா பாதிப்பு, வெள்ளப்பாதிப்பினால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து அவதியுறும் நிலை ஆகிய மக்கள் பிரச்சினைகளையெல்லாம் விட சுஷாந்த் தற்கொலை விவகாரம் அவர்களுக்கு பெரிதாக உள்ளது.
4,00,000 பணியிடங்கள் காலியாக உள்ளன, இன்னும் நிரப்பப்படவில்லை. ரேஷனில் பொருட்கள் இல்லை. இளைஞர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. பாஜக-நிதிஷ் ஆட்சியில் அரசு எந்திரமே கிழிந்து தொங்குகிறது. இவற்றிலிருந்து மக்களைத் திசைத்திருப்ப சினிமா நட்சத்திரத்தின் மரணத்தை கையில் எடுத்துள்ளனர்.
மின்னணு ஊடகங்களில் சுஷாந்த் சிங், ரியா சக்ரவர்த்தி விவகாரத்தை எப்போதும் சவட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், இது அவமானகரமானது. கைகூப்பி ஊடகங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். உண்மையான இந்தியாவின் நிலைமையை அதன் மக்களின் தற்போதைய வாழ்க்கை நிலையைக் காட்டுங்கள்.
அதை விடுத்து பாஜக பிரச்சார எந்திரமான மோடிஜியின் ‘புதிய இந்தியா’, அல்லது நம் கண்களைக் கட்டிப்போட்டு விட்டு காட்டும் புனைவு இந்தியாவைக் காட்டாதீர்கள், அப்படி ஒன்று இல்லை.
சுஷாந்த் சிங் முகம் கொண்ட ஸ்டிக்கர்கள், முகக்கவசங்களை ஆயிரக்கணக்கில் தயாரித்து பாஜக பண்பாட்டுப் பிரிவு பிஹார் தேர்தலில் களமிறங்கியுள்ளது. மக்கள் பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று ராஷ்ட்ரீய ஜனததளக் கட்சியும் விமர்சனம் செய்து வருகிறது.
-(பிடிஐ தகவல்களுடன்...)