Published : 08 Sep 2020 07:31 AM
Last Updated : 08 Sep 2020 07:31 AM

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘ஹைபர்சோனிக்’ வாகன சோதனை வெற்றி

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைபர்சோனிக் தொழில்நுட்ப வாகனம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் `ஹைபர் சோனிக்’ தொழில்நுட்பத்தில் செயல்படும் அதிநவீன வாகனங்கள் (எச்எஸ்டிடிவி) உள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் இந்த வாகனத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்த வாகனத்தை வெற்றிகரமாகத் தயாரித்தது.

ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 11.03 மணிக்கு இந்த வாகனம் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாகப் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. காற்று அழுத்தத்துக்கு ஏற்ப விரைந்து செயல்படும் `ஸ்கிராேேம்ஜெட்’ இன்ஜின் சக்தியுடன் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அக்னி ரக ஏவுகணை பூஸ்டர், ஹைபர்சோனிக் வாகனத்தை விண்ணில் 30 கி.மீ உயரத்துக்கு எடுத்துச் சென்றது. அதன்பிறகு, ஹைபர்சோனிக் வாகனம் அதில் இருந்து தனியாக பிரிந்தது. வாகனம் தனியாக பிரிந்தவுடன் ஸ்கிராம்ஜெட் இன்ஜின் உடனடியாக இயங்கியது.

வாகனம் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்தது. அணுஆயுதங்கள் மற்றும் அதிக தொலைவில் உள்ள எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் வாகனமாக இது செயல்படும்.

சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்கு டிஆர்டிஓ விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, `‘சிக்கலான தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த வாகனத்தை உருவாக்கி, வெற்றிகரமாக சோதனையை செய்து பார்த்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகள். இது டிஆர்டிஓ சாதனைகளில் ஒரு மைல்கல்லாக அமையும். பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தை உண்மையாக்கும் வகையில், உள்நாட்டிலேயே இந்த வாகனம் வடிவமைத்துள்ளது மிக முக்கியமான முன்னேற்றம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, `‘ஹைபர்சோனிக் டெக்னாலஜியுடன் உருவாக்கப்பட்ட இந்த வாகனம் அனைத்துக்கட்ட சோதனைகளிலும் வெற்றி பெற்றுள்ளது’’ என்று அறிவித்தனர். ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x