

தேச நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி வகுத்துள்ள டாப் 10 முன்னுரிமைகள் என்னவென்பது இன்று வெளியாகும் என பிரதமரின் முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நிரிபேந்திர மிஸ்ரா கூறியுள்ளார்.
'தி இந்து - பிஸினஸ் லைன்' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில்; "தேச நலனுக்காக பிரதமர் மோடி வகுத்துள்ள டாப் 10 முன்னுரிமைகள் சரியான கால இடைவெளியில் அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம். பிரதமர் அலுவலகம், பிரதமரின் எண்ணங்களையும், அவரது தனித் தன்மையையும், பொறுப்புகளையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். பிரதமர் அலுவலகம் பிரதமரின் கட்டளைகளை நிறைவேற்றும் வகையில் துடிப்புடன் செயல்படும்" என்றார்.
நிரிபேந்திர மிஸ்ரா, பிரதமரின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டது ஆச்சர்யமான முடிவாகவே பார்க்கப்படுகிறது. காரணம், மிஸ்ரா இதற்கு முன்னதாக மோடிக்காக பணியாற்றியதும் இல்லை ஏன் அவரை சந்தித்ததும் கூட இல்லை என்பதே.
1967-ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மிஸ்ரா, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
புதிய தலைமையின் கீழ் பிரதமர் அலுவலகத்தை ஒரு முக்கிய அதிகார மையமாக தான் பார்ப்பதாக கூறுகிறார் மிஸ்ரா.
பிரதமர் அலுவலகம் ஆற்ற வேண்டிய மூன்று முக்கிய கடமைகள் இருக்கின்றன. அதன்படி, செயலாக்கம், அமைச்சரவைகளுக்குள் எழும் விவகாரங்களை சீர் செய்வது, பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகியனவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் கூறுகிறார்.
உட்கட்டமைப்பு, கொள்கை சீரமைப்பு போன்ற விவகாரங்களில் பிரதமர் அலுவலக அணுகுமுறை எந்த மாதிரியானதாக இருக்கும் ?
இது தொடர்பாக பிரதமரே இறுதி முடிவு எடுப்பார். இருப்பினும், தனிப்பட்ட முறையில் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. அவை, மிகப்பெரிய அளவில் முதலீடு செய்தும் ஏன் மின் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை? தேசிய நெடுஞ்சாலை ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டபடி சாலை பணிகளை ஏன் முடிக்க முடியவில்லை? இயற்கை வளங்கள் மிகை மிஞ்சியிருந்தாலும் தாது ஏற்றுமதியில் வருமானம் இலலி, நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது, என்பனவே ஆகும்.
அரசியல் தலைவர்கள் எடுக்கும் சில முடிவுகளால் சர்ச்சைகளில் சிக்கி நீதிமன்றத்திற்கு அலைய வேண்டுமே என்ற அச்சத்தாலேயே பல அரசு உயர் அதிகாரிகள் கொள்கை முடிவுகளை எடுக்காமல் தவிர்க்கின்றனர். அரசு அதிகாரிகள் மத்தியில், நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும்?
குஜராத்தில் மோடியின் தலைமையை உதாரணமாக சொல்ல விரும்புகிறேன். மோடி, அதிகாரிகளை உத்வேகப்படுத்த மூன்று விஷயங்களை கடைபிடித்தார். நன்றாக பணிபுரியும் அரசு அதிகாரிகளுக்கு 4 முதல் 5 ஆண்டுகள் வரை அவர் வகிக்கும் பொறுப்பில் தொடர வழிவகை செய்வார், புதிய திட்டங்களை கொண்டு வர அதீத சுதந்திரம் அளிப்பார். இவை தவிர அனைத்து கொள்கை முடிவுகளுக்கும் தானே பொறுப்பேற்றுக் கொள்வார். எனவே, அரசு அதிகாரிகள் புதிய அத்தியாயத்துக்கு ஆயத்தமாகி விட்டனர் என்றார்.
சுகாதாரம், கல்வி போன்ற சமூக உட்கட்டமைப்புகளை புதுப்பிப்பது தொடர்பான திட்டங்கள் என்ன?
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது முதன்மையான லட்சியமாக இருந்தாலும். அரசு இயந்திரங்களால் மட்டுமே இதை முழுமையாக முடித்துவிட முடியாது. சுகாதாரத் துறையில் தனியார் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்.
நரேந்திர மோடி கூடுதல் நேரம் பணியாற்றக் கூடியவர். அதே வேளையில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் கூடுதல் அதிகாரம் அளிப்பார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. உயர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இது அவருக்கு சாத்தியமாகிறது.
பிரதமரின் முதன்மை செயலராக எப்படி தேர்வுசெய்யப்பட்டீர்கள்?
அது எனக்கே மிகப் பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது. குஜராத் பவனில், நரேந்திர மோடியை சந்திக்குமாறு கூறினர். மே 25-ல், பிரதமரின் முதன்மை செயலராக பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
டிராய் சேர்மனாக இருந்த பின்னர், பிரதமரின் முதன்மைச் செயலராக பொறுப்பேற்றது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தமிழில்: பாரதி ஆனந்த்